Published:Updated:

`கொரோனா இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை!’ - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்

மா.சுப்பிரமணியன் பேட்டி
News
மா.சுப்பிரமணியன் பேட்டி

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு, 'இறப்பின் விகிதத்தைக் குறைத்தோ, கூட்டியோ காட்ட வேண்டிய அவசியமில்லை' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நேற்று (07.06.2021) காலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா குறித்துக் காட்டமாக பேசியதோடு, "இன்று விழுப்புரத்தில், சிகிச்சை பலனின்றி இறக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இறந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை மட்டும்தான் கணக்கு காட்டுகிறார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி விடப்பட்ட நபர்களில் சிலர் இறப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அப்படிப் பார்த்தால் இறப்பு விகிதம் 3% முதல் 4% மேல் இருக்கிறது" எனும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம்
விழுப்புரத்தில் சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

இந்தநிலையில், விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (07.06.2021) மாலை, உயர்கல்வித்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்களுடன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,

"முதல்வரின் கட்டளைப்படி யாரையும் விமர்சித்துப் பேசுவதோ, அரசியல் செய்வதற்கான இடமோ இந்தப் பணியில் இருக்கக் கூடாது என்பதுதான். அதனால் கேட்கப்படுகிற துறைரீதியான அனைத்துக் கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளிக்கப்படும். ஆக்சிஜன், ரெம்டெசிவிர், கறுப்பு பூஞ்சைக்கான மருந்துகளாக இருந்தாலும் சரி, எல்லாமே வந்துகொண்டிருக்கின்றன, முறையாக சென்றுகொண்டிருக்கின்றன. கொரோனா தொற்றின் அளவும் குறைந்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னாள் அமைச்சர், ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், இறப்பின் விகிதத்தை குறைத்தோ, கூட்டியோ காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் நேரடியாக ஆய்வு செய்த வரை, விழுப்புரம் 23-வது மாவட்டம். ஒரு மாதத்துக்குள்ளாகவே 23 மாவட்டங்களுக்கு நேராகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து, அவர் கூறும் புள்ளிவிவரத்தை கேட்டுவிட்டு மட்டும் வருவதில்லை. கிராமம்தோறும், ஆரம்ப சுகாதார நிலையம்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறோம். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நோயின் தன்மை குறித்த பயமும் விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படும் என்பது எங்களுடைய நம்பிக்கை.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அப்படியிருக்க, இறப்பு விகிதத்தைக் குறைத்து, கூட்டி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க ஆட்சியின்போதுதான் சென்னையில் காலரா இறப்பு விகிதம் குறைத்து காட்டப்பட்டது. அந்த மாதிரியான தவற்றை தி.மு.க அரசு ஒருபோதும் செய்யாது. மாவட்டங்களுக்கு என்னென்ன தேவை எனும் பட்டியலை தந்திருக்கிறார்கள். அந்தத் தேவையை நிச்சயமாக இந்த அரசு ஏற்படுத்தித் தரும்.

கொரோனாவைக் கருத்தில்கொண்டு 'கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' எனும் கோரிக்கை எழுந்தது. உடனே முதல்வர், 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள், 3,700 மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்துக்கொள்ளும்படி கூறினார்கள். அதன்படி, விழுப்புரத்தைப் பொறுத்தவரை 30 மருத்துவர்கள் நேரடியாகவே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே கறுப்பு பூஞ்சை நோய் வருவதில்லை. நீண்ட நாட்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாகக் குறைவாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே இது வருகிறது என்று சொல்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது வருவதில்லை" என்றார்.