Published:Updated:

``திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்வதை மனம் ஏற்கவில்லை” -பதவியை உதறிய தருமபுரி மாவட்டத் தலைவர்

கோவி.சிற்றரசு

‘‘இது, என்னுடைய உணர்வு மட்டுமல்ல. பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கிறேன்’’ என்கிறார் கோவி.சிற்றரசு.

``திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்வதை மனம் ஏற்கவில்லை” -பதவியை உதறிய தருமபுரி மாவட்டத் தலைவர்

‘‘இது, என்னுடைய உணர்வு மட்டுமல்ல. பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கிறேன்’’ என்கிறார் கோவி.சிற்றரசு.

Published:Updated:
கோவி.சிற்றரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகளாகச் சிறை வாழ்க்கையிலிருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. அவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ‘‘முதலமைச்சர் ஸ்டாலின், தன்னைச் சந்திக்க வந்த பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்று வாழ்த்து தெரிவித்தது வருத்தமளிக்கிறது. தி.மு.க-வுடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்வதை மனம் ஏற்கவில்லை’’ எனக் கூறி காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா கடிதம்
ராஜினாமா கடிதம்

இது தொடர்பாக, கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கோவி.சிற்றரசு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘உலகம் போற்றும் உத்தம தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைக் குற்றவாளியைக் கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே, நான் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன். எனது பதவி விலகலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து, கோவி.சிற்றரசுவிடம் பேசினோம். ‘‘தீர்ப்பைப் பற்றியோ, அவர் விடுதலையானதைப் பற்றியோ நான் பேசவில்லை. ‘எங்கள் தலைவரைக் கொன்றவர்களை கூட்டணியில் இருந்துகொண்டு கொண்டாட வேண்டாம்’ என்றுதான் சொல்கிறோம். ‘அப்படிப்பட்ட கூட்டணி நமக்குத் தேவையா?’ என்று எங்கள் கட்சித் தலைமையைப் பார்த்துத்தான் கேள்வி எழுப்புகிறோம். அவர்கள் கொள்கைப்படி தமிழர் உணர்வு என்று நடந்துகொள்கிறார்கள். நாங்கள் தேசிய உணர்விலிருக்கிறோம். ‘கூட்டணியைவிட்டு வெளியே வாருங்கள்’ என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், என் ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்வேன். இல்லையெனில், இந்த முடிவே இறுதியானது.

பேரறிவாளனை ஆரத்தழுவிய ஸ்டாலின்
பேரறிவாளனை ஆரத்தழுவிய ஸ்டாலின்

பேரறிவாளன் தமிழர் என்றால், சம்பவத்தில் காயம்பட்ட குடும்பத்தினர் தமிழர்கள் இல்லையா... இவர்களைக் கொண்டாடும்போது, அவர்களின் வலிகளை உணராதது ஏன்? நான் காயம்பட்டவர்களுக்காகவும் பேசவில்லை. 1984-ல் காங்கிரஸ் இயக்கத்துக்கு வந்தவன் நான். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸில் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக மாவட்டத் தலைவராக நீடிக்கிறேன். மாணவர் காங்கிரஸில் இருந்தபோதே, தலைவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க இரண்டு முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீதான ஈர்ப்பால்தான் காங்கிரஸில் இணைந்தேன்.

என் தலைவனைக் கொன்றவர்களைக் கொண்டாடும் கூட்டணி எனக்கு வேண்டாம். இது, என்னுடைய உணர்வு மட்டும் அல்ல. பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறேன். என்னைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்திலுள்ள வட்டாரத் தலைவர்கள் எட்டுப் பேர் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் பலபேர் ராஜினாமா செய்துகொண்டிருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்திருக்கிறார். என் ராஜினாமா கடிதம் தொடர்பாக, இதுவரை தலைவரோ, தலைமையோ என்னிடம் பேசவில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism