Published:Updated:

`தகவலும் இல்லை, அழைப்பிதழும் இல்லை’ - பெரிய கோயில் தேரோட்டம்; திமுக எம்.எல்.ஏ-க்கள் மிஸ்ஸிங்

பெரிய கோயில் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் ( ம.அரவிந்த் )

அ.தி.மு.க ஆட்சியின்போது பெரிய கோயில் தொடர்பான விழாக்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். ஆனால், தி.மு.க ஆட்சியில் உள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்கூட கலந்துகொள்வதில்லை.

Published:Updated:

`தகவலும் இல்லை, அழைப்பிதழும் இல்லை’ - பெரிய கோயில் தேரோட்டம்; திமுக எம்.எல்.ஏ-க்கள் மிஸ்ஸிங்

அ.தி.மு.க ஆட்சியின்போது பெரிய கோயில் தொடர்பான விழாக்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். ஆனால், தி.மு.க ஆட்சியில் உள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்கூட கலந்துகொள்வதில்லை.

பெரிய கோயில் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கிவைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சாவூரின் அடையாளமான பெரியகோயிலில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், `பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட்’ காரணத்தால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தேரோட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்ட விழா
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்ட விழா

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், `தி.மு.க-வில் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் பலரும் பெரியகோயிலில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதைத் தொடர்ந்து தவிர்த்துவருகின்றனர். கடந்த ஐப்பசி மாதம் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழாவில் கோயிலுக்கு வெளியே இருக்கும் அவரின் சிலைக்கு தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் கோயிலுக்குள் செல்லாமல் சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் கலந்துகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சதயவிழா தினத்தில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ராஜராஜ சோழன் குறித்த விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு அதிகாரிகள் காத்திருந்தனர். வருவதாகச் சொன்ன அவரும் வராமலேயே சென்றுவிட்டார்.

தி.மு.க எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன்
தி.மு.க எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன்

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிக்கான இடம் தேர்வுசெய்வதற்காக வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெரிய கோயில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பெத்தண்ணன் கலையரங்கம் வரை வந்தவர் கோயிலுக்குள்ளே செல்லவில்லை. அப்போது துரை.சந்திரசேகரன், சேகர் பாபுவிடம் `அண்ணே கோயிலுக்குள்ள போகவில்லையென்றால் தேவையில்லாத விமர்சனம் வரும், உள்ள போயிட்டுப் போகலாம்' எனச் சொல்லியும் உள்ளே செல்லவில்லையாம்.

இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் மஹா சிவராத்திரி விழாவை நடத்தினால் கலந்துகொள்ள முடியாது என்ற காரணத்தால் எம்.எல்.ஏ-க்கள் சொன்னதன் பேரில் திலகர் திடலில் விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்துகொள்ளாமல் எம்.எல்.ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம் இருவரும் புறக்கணித்திருக்கின்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் இருவரும் இருக்கின்றனர். இந்தச் சூழலில் தஞ்சைக்குள் இருவரும் இருந்தும் தேரோட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தஞ்சை தி.மு.க மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட சிலர் மட்டும் சென்டிமென்டை கவனத்தில்கொள்ளாமல் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம்
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம்

இதேபோல் கடந்த ஆண்டு விழாவிலும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. `அ.தி.மு.க ஆட்சியின்போது பெரிய கோயில் தொடர்பான விழாக்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எந்த பயமும் இல்லாமல் கலந்துகொண்டனர். சில சென்டிமென்ட்களை மனதில் வைத்திருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பயத்தால் பெரிய கோயில் தேரோட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கின்றனர்’ எனத் தெரிவித்தனர்.

இது குறித்து கேட்பதற்கு தி.மு.க எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகத்தைத் தொடர்புகொண்டோம் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. அவரது தரப்பினரிடம் விசாரித்தோம், ``மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணக்குமார் இதற்கான ஏற்பாட்டை முன்னின்று செய்தனர். அவர்களுக்கும் எம்.எல்.ஏ- தரப்புக்கும் ஏற்கெனவே சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டால் தேவையில்லாத சர்ச்சை உண்டாகும் என்பதால் டி.கே.ஜி செல்லவில்லை. மற்றபடி அடிக்கடி அவர் பெரியகோயிலுக்குச் செல்லக் கூடியவர்தான்” என்றனர்.

தி.மு.க எம். எல்.ஏ-க்கள் டி.கே.ஜி நீலமேகம், துரை.சந்திரசேகரன்
தி.மு.க எம். எல்.ஏ-க்கள் டி.கே.ஜி நீலமேகம், துரை.சந்திரசேகரன்

இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனிடம் பேசினோம், ``தேரோட்டம் குறித்து என்னிடம் தகவல் சொல்லவில்லை, எனக்கு அழைப்பிதழும் கொடுக்கவில்லை அதனால் நான் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுவிட்டேன்” என்றார்.