Published:Updated:

`அமைச்சர் வீரமணியின் முகத்திரையைக் கிழிப்போம்!’ -தீர்மானம் நிறைவேற்றிய பேரணாம்பட்டு மக்கள்

பேரணாம்பட்டு பேருந்துநிலைய இடமாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்குப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் வீரமணி
அமைச்சர் வீரமணி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது, நகராட்சி பேருந்து நிலையம். பாதுகாப்பாகவும் வசதி நிறைந்ததாகவும் உள்ள இந்தப் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில், 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

நகராட்சி பேருந்து நிலையம்
நகராட்சி பேருந்து நிலையம்

``நகரைவிட்டு வெகுதூரத்தில் விற்பனையாகாத வீட்டுமனைப் பிரிவுகள் உள்ளன. அதை யாரும் வாங்க வராததால், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மூன்றுபேர் பேருந்து நிலையத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர். இதில், பெரிய கூட்டுச் சதி நடந்திருக்கிறது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணியின் பினாமிகள்தான் அந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள்.

விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து 400 மீட்டர் உள்ளே வீட்டுமனைப் பிரிவின் இறுதியில் அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும் மக்களின் எதிர்ப்பைப் பரிசீலனை செய்ய முன்வரவில்லை. பேருந்து நிலையத்தை இடமாற்றக் கூடாது’’ என்று பேரணாம்பட்டு மக்களும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

பேருந்துநிலையம் இடமாற்றம் செய்ய உள்ள நிலம்
பேருந்துநிலையம் இடமாற்றம் செய்ய உள்ள நிலம்

புகார் தொடர்பாக அமைச்சர் வீரமணியிடம் பேசியிருந்தோம். நம்மிடம் அவர், ``இப்போதைய பேருந்து நிலையத்தை எதுவும் செய்யப்போவதில்லை. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு இங்கேயும் பேருந்துகள் வழக்கம்போல் நின்று செல்லும். யாராவது எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது நல்ல காரணத்திற்காகத்தான்” என்றார்.

இந்த நிலையில், பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதற்கான அரசாணை நேற்று திடீரென வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பேருந்து நிலைய மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நேற்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பா.ஜ.க, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

பேருந்து நிலைய மீட்புக்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம்
பேருந்து நிலைய மீட்புக்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில், ``அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்தால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம். நகராட்சிக்கு வரி செலுத்தமாட்டோம். அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம். பத்தாயிரம் பேரைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம். தினந்தோறும் ஒரு நூதன போராட்டத்தைச் செய்வோம்’’ என்பன போன்ற பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மேலும், ``அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அமைச்சர் வீரமணியின் முகத்திரையைக் கிழிப்போம்’’ என்றும் ஆவேசமாகக் கூறினர்.