Published:Updated:

`ஆளும்கட்சியோ... எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டுச் சிறை!’ - வேலூர் கலெக்டர் அதிரடி

``அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த உத்தரவு, அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தும்’’ என்று வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் எச்சரித்திருக்கிறார்.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

சென்னையில், சாலை நடுவில் ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில், டூ வீலரில் சென்ற சுபஸ்ரீ (23) என்ற இளம்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்புறம் வந்த லாரியில் சிக்கி, அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் மீளா சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகளை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

இந்த நிலையில், ``வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என்று கலெக்டர் சண்முக சுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ``போக்குவரத்துக்கு இடையூறாகப் பேனர்களையோ, `சுலோகன்’ பொறித்த பதாகைகளையோ வைக்கக் கூடாது.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

பிரதான சாலைகளின் இரு புறமும், நடைபாதைகள், சாலையின் நடுவிலும், கல்வி நிறுவனம், வழிப்பாட்டு தலம், மருத்துவமனை, நினைவுச் சின்னம், சிலைகள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களிலும் கூட அங்கீகரிக்கப்பட்ட எந்தவோர் அரசியல் கட்சியினரும் பேனர்களை வைக்கக் கூடாது. 

தற்காலிக விளம்பரப் பலகைகள் வைக்கக் கால அளவு 6 நாள்கள் மட்டுமே. இரண்டு விளம்பரப் பலகைகளின் இடையே 10 மீட்டர் இடைவெளி விடவேண்டும். பொதுமக்கள் பேனர்கள், பதாகைகள் குறித்து அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அலுவலர், காவல் ஆய்வாளரிடம் புகாராக தெரிவிக்கலாம். 

பேனர்கள்
பேனர்கள்

விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேனர் விவகாரத்தில், வேலூர் மாவட்டத்தை ஒரு முன்மாதிரியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.