Election bannerElection banner
Published:Updated:

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்!

எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்
எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுக-வில் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் தோப்பு வெங்கடாசலம் வருவாய்த்துறை அமைச்சர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்திருக்கிறார்.

`2016-ல் எம்.எல்.ஏ-வாகியும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு அமைச்சர் கருப்பணன்தான் காரணம்’ எனக் கோபத்தில் இருந்த தோப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதியில் கருப்பணனுடைய ஆதரவாளர்களைக் கட்டம்கட்டிப் புறக்கணித்துவந்தார். இது லோக்கல் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க தலைமையும் தோப்புவின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருந்துவந்தது.

சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்
சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலத்துக்கு சீட் மறுக்கப்பட்டு, பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் ஜே.கே (எ) ஜெயக்குமாருக்கு சீட் வழங்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தியடைந்த தோப்பு வெங்கடாசலம், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தும், பெருந்துறையில் தன்னுடைய ஆதரவாளர்களைவைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் குமுறித் தள்ளினார். உச்சபட்சமாக `கட்சிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்’ எனக் கண்ணீர்விட்டு அழ, அவருடைய ஆதரவாளர்களும் கதறி அழுதனர். அதையடுத்து பெருந்துறையில் சுயேச்சையாகக் களமிறங்குவது என முடிவெடுத்த தோப்பு வெங்கடாசலம், நேற்று மதியம் பெருந்துறையில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்துவந்த தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதையடுத்து எந்நேரமும் தோப்பு வெங்கடாசலம் மீது கட்சி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.

`ஏன் எனக்கு சீட் கொடுக்கலை!’ - கலங்கி நிற்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்!

அதைப்போலவே, ‘பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த காரணத்தால் தோப்பு வெங்கடாசலம், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்’ என அ.தி.மு. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசி எனச் சொல்லிக்கொள்ளும் தோப்பு வெங்கடாசலம், அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு