Published:Updated:

ஒன் பை டூ: நிதின் கட்கரி காங்கிரஸை வாழ்த்தியது ஏன்?

பீட்டர் அல்போன்ஸ், வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர் அல்போன்ஸ், வானதி சீனிவாசன்

“காங்கிரஸ் கட்சி பலமடைய மனதார வாழ்த்துகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் பா.ஜ.க அமைச்சர் நிதின் கட்கரி. எதற்காக அவர் இப்படிப் பேசினார்... உட்கட்சி உரசலா, அரசியல் நாகரிகமா?

ஒன் பை டூ: நிதின் கட்கரி காங்கிரஸை வாழ்த்தியது ஏன்?

“காங்கிரஸ் கட்சி பலமடைய மனதார வாழ்த்துகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் பா.ஜ.க அமைச்சர் நிதின் கட்கரி. எதற்காக அவர் இப்படிப் பேசினார்... உட்கட்சி உரசலா, அரசியல் நாகரிகமா?

Published:Updated:
பீட்டர் அல்போன்ஸ், வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர் அல்போன்ஸ், வானதி சீனிவாசன்

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர்

``வேறன்ன அச்சம்தான்! கட்சியின் அதிகாரம் அனைத்தும் ஒற்றை இடத்தில் குவிவதால் ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடே நிதின் கட்கரி பேச்சு. பா.ஜ.க-வில் இருக்கும் பலரும் அதிகாரம் தனிமனிதரிடம் குவிவது மிகப்பெரிய ஆபத்து என்பதை இப்போதுதான் உணர்ந்துவருகிறார்கள். தட்டிக் கேட்கவே முடியாத, யாராலும் கேள்வி கேட்கவே முடியாத ஒரு தலைமை, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை நிதின் கட்கரி உள்ளேயிருந்து பார்த்திருக்கிறார். அதனால்தான் பா.ஜ.க தலைவர்கள் அனைவரும், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கும்போது நிதின் கட்கரி மட்டும் ‘காங்கிரஸ் வலுவடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்கிறார். தேசிய அளவில் மாநிலக் கட்சிகள் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இவர்களைத் தலைமையேற்று நடத்த, காங்கிரஸால் மட்டுமே முடியும் என்பதை நிதின் கட்கரி அறிந்திருக்கிறார். பா.ஜ.க-வில் மோடி, அமித் ஷாவின் கருத்துகளுடன் முரண்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதுதான் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே நிதின் கட்கரியின் கருத்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது!’’

ஒன் பை டூ: நிதின் கட்கரி காங்கிரஸை வாழ்த்தியது ஏன்?
ஒன் பை டூ: நிதின் கட்கரி காங்கிரஸை வாழ்த்தியது ஏன்?

வானதி சீனிவாசன், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவர்

``பா.ஜ.க கட்டமைத்த `தேசியம்’ என்கிற சிந்தனைக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நிதின் கட்கரி பெருந்தன்மையுடன் இப்படிப் பேசியிருக்கிறார். டெல்லியில் பொதுவாக நிலவும் அரசியல் நாகரிகம் இது... ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’தான் பா.ஜ.க-வின் குறிக்கோள். இப்போது கிட்டத்தட்ட காங்கிரஸ் இல்லாத இந்தியாவைக் கட்டமைத்து, எங்களின் குறிக்கோளில் வெற்றிபெறும் இடத்துக்கு வந்து நிற்கிறோம். அதேசமயம், நாங்கள் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்வது ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்வதாகத்தான் அர்த்தம். அதன் அடிப்படையில்தான் காங்கிரஸ் இல்லாத ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். எனவே, ‘காங்கிரஸ் வலுவடைய வேண்டும்’ என்று நிதின் கட்கரி கூறியிருப்பது முழுக்க முழுக்க ஜனநாயகத் தன்மையை ஒட்டிய ஒரு பார்வை. இந்தியாவுக்குள் பிராந்தியம், மொழிகள், பழக்கவழக்கங்கள் என்று எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் தேசியம் என்ற அடிப்படை உணர்வுதான் நம்மை ஒருங்கிணைக்கிறது. பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியால் தேசியம் என்கிற சித்தாந்தம் பலவீனமடைய வாய்ப்புகள் அதிகம். எனவே, தேசிய உணர்வைக் காப்பாற்ற, ஒரு தேசியக் கட்சியாகக் காங்கிரஸ் வலுவான நிலையை அடைய வேண்டும் என்றுதான் நிதின் கட்கரி பேசியிருக்கிறார்!’’