Published:Updated:

தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்... - வேகம் காட்டுகிறதா காவல்துறை?!

தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டாலோ அல்லது உடந்தையாக இருந்தாலோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்... - வேகம் காட்டுகிறதா காவல்துறை?!

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டாலோ அல்லது உடந்தையாக இருந்தாலோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Published:Updated:
தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பா.ஜ.க., ஆர்,எஸ்,எஸ் அமைப்பினரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றிருப்பது மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 23 -ம் தேதி கோவை குனியமுத்தூரில் பாஜக பிரமுகர் பரத் என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரின் கார் தீப்பிடித்தது.

பெட்ரோல் குண்டுவீச்சு
பெட்ரோல் குண்டுவீச்சு

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய ஏழு தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவந்தனர். இந்தச் சூழலில், பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் காருக்கு தீ வைப்பு வழக்கில் இருவரை, கடந்த 25-ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். இதேபோல், மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அபுதாகிர் என்ற வாலிபரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

பெட்ரோல் குண்டு வீசும் காட்சி
பெட்ரோல் குண்டு வீசும் காட்சி

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான பேருந்தின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பேருந்திலிருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு அடுத்த நாளே, கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடலைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இந்தச் சம்பவத்தில், குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸாமில் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் கைதுசெய்து, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். 

கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்
கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் பல மாவட்டங்களில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க-வினர் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இனியும் அசம்பாவித சம்பவம் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, சென்னையில் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். இரண்டு நாள்களில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டிருக்கிறது. 

சைலேந்திர பாபு, டிஜிபி
சைலேந்திர பாபு, டிஜிபி

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவுசெய்து புலன் விசாரணை நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் இரவு ரோந்துப் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. பல இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறது. கோவையில் மட்டுமே 3,500 போலீஸார் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, மொத்தம் 19 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டாலோ அல்லது உடந்தையாக இருந்தாலோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.