Published:Updated:

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு: `அதிரடிகாட்டவே கைது’ என்கிற எதிர்த் தரப்பு வாதம் உண்மையா?

பெட்ரோல் குண்டுவீச்சு | கைது

சமீபத்தில் நடந்தேறிய பா.ஜ.க நிர்வாகிகளின் இடங்களின் மீதான வெடிகுண்டுவீச்சு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதாகச் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு: `அதிரடிகாட்டவே கைது’ என்கிற எதிர்த் தரப்பு வாதம் உண்மையா?

சமீபத்தில் நடந்தேறிய பா.ஜ.க நிர்வாகிகளின் இடங்களின் மீதான வெடிகுண்டுவீச்சு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதாகச் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

Published:Updated:
பெட்ரோல் குண்டுவீச்சு | கைது

என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை இணைந்து, சமீபத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் இல்லங்களிலும் இந்தியா முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தின. அப்போதே பலர் கைதும் செய்யப்பட்டார்கள். அதையொட்டி, தமிழகத்தில் கோவை, சேலம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க நிர்வாகிகளின் இல்லங்களில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. அது சம்பந்தப்பட்ட வீடியோக்களும் வெளியாகிவருகின்றன.

என்.ஐ.ஏ (NIA)
என்.ஐ.ஏ (NIA)

’இன்று மாலைக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்’ என்று டி.ஜி.பி சைலேந்திர பாபு செப்டம்பர் 25-ம் தேதி காலை பேசியிருந்தார். இந்நிலையில், கோவை, சேலத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. ’கட்சியைக் களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கைதுசெய்திருக்கிறார்கள். பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சி விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், `இந்தக் கைது சம்பவங்களில் தமிழக அரசு நிதானமாகச் செயல்பட்டிருக்கிறதா அல்லது அதிரடிகாட்டியிருக்கிறதா?’ என்ன கேள்வியை முன்வைத்தோம்.

சைலேந்திர பாபு, டிஜிபி
சைலேந்திர பாபு, டிஜிபி

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், மாநில சிறுபான்மைப் பிரிவின் இணைச் செயாளருமான ஜவஹர் அலியிடம் இது பற்றிக் கேட்டபோது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாசாரம் வந்திவிடும் என்பதற்கு சமீபத்திய சம்பவங்கள் உதாரணம். 1996-2001, 2006-2011 ஆகிய தி.மு.க ஆட்சிகளிலும் இது போன்ற வெடிகுண்டுச் சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கின்றன. பர்தா அணிந்திருந்த பெண்கள் முகத்தை விலக்கிப் பார்த்தது, அத்வானி வருகையின்போது முஸ்லிம் இளைஞர்களைக் கைதுசெய்தது, அப்பாவி இஸ்லாமியர்களை சிறைக் கைதிகளாக்கியது என எல்லாவற்றையும் செய்தது தி.மு.க-தான்.

தற்போது நடைபெற்றுவரும் வெடிகுண்டுச் சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட தி.மு.க மீதிருக்கும் அதிருப்திகளைத் திசைதிருப்ப, ஆதாரமேயின்றி முஸ்லிம்களைக் கைதுசெய்கிறது காவல்துறை. என்.ஐ.ஏ-வுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, அதை ஆதரித்து வாக்களித்தது தி.மு.க. இதன்படி பார்த்தால், என்.ஐ.ஏ-யின் இந்தச் செயல்களுக்கு மூலகாரணமாக இருப்பதே தி.மு.க-தான்.

ஜவஹர் அலி
ஜவஹர் அலி

இன்னொரு முக்கியமான விஷயம், செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவதாக அறிவித்த ஸ்டாலின், இரண்டாண்டுகளாக ஒருவரைக்கூட விடுவிக்கவில்லை. ஒருவேளை முஸ்லிம்களை விடுதலை செய்தால், இப்படியான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்றொரு மாயத் தோற்றத்தை மக்கள் மத்தியில் பதியவைப்பதற்காகவே இஸ்லாமியர்களை போலீஸார் கைதுசெய்கின்றனர்.

ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி

கடந்த 10 ஆண்டுகள் அம்மா மற்றும் எடப்பாடி ஆட்சியில் இப்படியான ஒரு சம்பவத்தைக்கூடக் காட்ட முடியாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை இஸ்லாம் ஆதரிக்காது. உலமாக்கள் பேரவையும் அதை வலியுறுத்தியிருக்கிறது. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் போலீஸால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், ஜனநாயக இயக்கத்தில் இருப்பவர்களைக் கைதுசெய்வது என்பது மிகத் தவறான நடைமுறை.

தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் கடந்தகாலங்களில் தங்கள் இல்லங்களில் தாங்களே குண்டு போட்டுக்கொண்டது போன்றுகூட இப்போது நடந்திருக்கலாம். இஸ்லாமியர்களுக்குப் பொதுச்சமூகம் முன்பு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ, வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியை உருவாக்கவோகூட சிலர் இதைச் செய்திருக்கலாம்.

ஆனால், மொத்தமாகப் பழியைத்தூக்கி முஸ்லிம்கள் மீது போடப்பார்க்கிறது தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் செயல்பாடுகளைப் பார்த்து, தற்போது முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்தால் பா.ஜ.க வளர்ந்துவிடும் என்று சொல்லி முஸ்லிம்கள் மத்தியில் பதைபதைப்பை உண்டாக்கியே வாக்குகளை வாங்கியது தி.மு.க என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொண்டனர். இந்தத் தொடர் கைதுகள், அரசியல்ரீதியாக தி.மு.க-வுக்குக் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். வாக்குவங்கியாகவே முஸ்லிம்களைப் பார்க்கிறது தி.மு.க என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது!” என்று முடித்தார்.

எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கிடம் பேசியபோது, “கோவை, சேலம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கோவையில் கிளைத் தலைவர் ஜேசுராஜ், கிளைச் செயலாளர் இல்யாஸ் ஆகியோரும், சேலத்தில் மாவட்டத் தலைவர் செய்யது அலி, கிளைக் கழகத்தைச் சேர்ந்த காதர் உசேன் ஆகியோர் மட்டுமே எங்கள் கட்சி நிர்வாகிகள். மற்ற இடங்களில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கும், எங்கள் கட்சிக்கும் தொடர்பில்லை.

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

இந்தக் கைது சம்பவங்கள் முற்றிலும் பா.ஜ.க-வின் அழுத்தத்துக்கு பயந்து நடந்திருக்கும் கைதுகள்தான். டி.ஜி.பி ’மாலைக்குள் கைதுசெய்யப்படுவார்கள்’ என்று செப்டம்பர் 25-ம் தேதி சொன்னதற்காகவே, அவசரகோலத்தில் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. உண்மையில் எங்களுக்கு இப்படிச் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற தேவையில்லை. வன்முறையில் நாட்டமற்றவர்கள் நாங்கள். குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள். ஆதாரங்களைக் கேட்டால், காட்ட மறுக்கிறார்கள். 

சேலத்தில் காதர் உசேன் கைதுசெய்யப்பட்டதால், அது பற்றி விசாரிக்க ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறார் செய்யது அலி. அங்குவைத்தே செய்யது அலியைக் கைதுசெய்துள்ளனர். செய்யது அலியின் பைக் என்பதாகச் சொல்லி ஒரு பைக்கைப் பறிமுதல் செய்துள்ளனர், அது அவரது பைக்கே இல்லை. ஜேசுராஜ் கைதுசெய்யப்பட்டதால், கோவை நிர்வாகிகள் விசாரிப்பதற்கு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, உள்ளேயிருந்து போலீஸ்காரர் ஒருவர், ‘யார் இல்யாஸ்?’ என்று கேட்டு, அவரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்று கைதுசெய்துள்ளனர். வேறு பிரச்னைகளை மடைமாற்றுகிற முயற்சி இது. டி.ஜி.பி-யும், முதல்வரும் இதில் தலையிட வேண்டும். 

நெல்லை முபாரக், எஸ்.டி.பி.ஐ
நெல்லை முபாரக், எஸ்.டி.பி.ஐ

அதிரடியாகச் செயல்படுகிறோம் என்று காட்டிக்கொள்ளவும், பா.ஜ.க-வுக்குக் கணக்கு காட்டவுமே இந்தக் கைதுகள் நடந்தேறியிருக்கின்றன. இந்த மாதிரியான நேரங்களில் தி.மு.க அரசு இப்படிச் செயல்படுவது என்பது, முஸ்லிம் மக்கள் மத்தியில் அந்தக் கட்சி மீதான நம்பிக்கையை இழக்கவைக்கும். பா.ஜ.க-காரர்கள் தங்களது வீடுகளில் தாங்களே வெடிகுண்டு வீசிய சம்பவங்கள் நடந்த வரலாறு இருக்கிறது. அதனால், முதலில் அப்படியான க்ரைம் ஹிஸ்டரியில் இருப்பவர்களைக் கைதுசெய்து விசாரித்திருக்க வேண்டும்.

கோவை கமிஷனருக்கே மிரட்டல் விடுத்தவர் அண்ணாமலை. வன்முறையை விதைப்பதே பா.ஜ.க-தான். பா.ஜ.க-வுக்கு எது நடந்தாலும் முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டக் கூடாது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிற்கப்போவதில்லை, நாங்கள் நீதிமன்றத்தில் சட்டப்படி இதைச் சந்திப்போம். என்.ஐ.ஏ அடாவடியால் தமிழகமே எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும்போது இப்படியான செயல்கள் கட்சிப் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் சதி. இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருப்பது ஆறுதலைக் கொடுக்கிறது” என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, “காவல்துறை ஏதோவோர் அடிப்படை ஆதாரம்கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு யாரையும் கைதுசெய்துவிட முடியாது. உதாரணத்துக்கு, தனிமனிதன் கைதுசெய்யப்பட்டால், அது அவனது குடும்பத்துடன் முடிந்துவிடும். ஆனால், இது ஓர் இயக்கம் சார்ந்தது என்கிறபோது, தகவல் இல்லாமல் செய்ய முடியாது. விசாரணையைத் தொடரும்போது ஒருவேளை தவறாகக்கூட இருக்கலாம். அப்படித் தவறானது என்று தெரியவந்தால் விட்டுவிடுவார்கள். காவல்துறை அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது.

1980-90-கள் காலமல்ல இது. இன்று, செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பத்திரிகை நிருபர்தான். ஒவ்வொருவரும் அவர்களது வீடியோக்களைப் பரப்பிவிட முடியும். ஓர் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பது காவல்துறையின் நோக்கமல்ல. இந்த விவகாரத்தில் கைதுச் சம்பவம் நடக்கவில்லை என்றால்கூட சமாளித்துவிடலாம். ஆனால், போலீஸ் இல்லாத ஒன்றைச் சொல்லி கைதுசெய்கிறது என்று வைத்துக்கொண்டால் அதற்கும் தி.மு.க அரசுதான் பொறுப்பை ஏற்றாக வேண்டும். இதையெல்லாம் உணராமலா போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கும்?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பா.ஜ.க நிர்வாகிகளின் கடந்தகாலச் சம்பவங்களை வைத்து, ஆயிரம் சந்தேகங்கள் அவரவர் பார்வையில் வரலாம். அப்படியல்லாமல் போலீஸ் தரப்பு சொல்வதுபோல இந்த இயக்கத்தின் மீதும் தவறு இருக்கலாம். இன்னோர் இயக்கத்திலிருந்து இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்து, அனுப்பிவிட்டவர்கள் சொல்படிகூட நடத்தியிருக்கலாம். எடுத்ததும் எந்த முடிவுக்கும் வந்துவிடட முடியாது. ‘அறமில்லாத மானமில்லாத நச்சு இயக்கம் தமிழகத்தில் காலூண்ற முயல்கிறது’ என்று முதல்வர் ஸ்டாலினே சொல்லியிருக்கிறார். அதன்படி பார்த்தால் அந்தக் கட்சி எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகலாம், அந்த எக்ஸ்ட்ரீமைக் கண்டுபிடிக்க வேண்டுமல்லவா? அதுதான் இங்கு முக்கியம்” என்றார்.