Election bannerElection banner
Published:Updated:

``பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம்!” - பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு எத்தகையது?

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் விலை உயர்வு

பாதுகாப்பு, பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளைத் தொடர்ந்து தற்போது பெட்ரோல் விலை உயர்வுப் பிரச்னையையும் பா.ஜ.க அரசால் கையாள முடியவில்லை என்பதால்தான் காங்கிரஸ்மீது பழி சுமத்துகிறார் பிரதமர் மோடி!

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக ராஜஸ்தானிலும், அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் அதிகப்படியான வரிவிதிப்பே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர். ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயுக்குழாய் வழிப்பாதை, சிபிசிஎல் மணலி - பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு பேசிய பிரதமர் மோடி ``நம்முடையை எரிபொருள் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பியிருப்பதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் இறக்குமதி தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த விலை ஏற்றம் நடந்திருக்கவே இருக்காது. இந்திய நாட்டின் நடுத்தர வர்க்க மக்களும் இந்த அளவுக்கு அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்” எனப் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் மீது பிரதமர் நரேந்திர மோடி வைத்திருக்கும் விமர்சனம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை வி.நாராயணிடம் பேசினோம்…

``பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய பா.ஜ.க அரசின் அதிகப்படியான வரி விதிப்புதான் காரணம். இதுவரையிலான பா.ஜ.க ஆட்சியில் 360% அளவுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு வரியைக் குறைப்பதை விட்டுவிட்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த இறக்குமதிக் கொள்கையில்தான் பிரச்னை. அதுதான் விலை உயர்வுக்குக் காரணம் எனப் பள்ளிக் குழந்தைகள்போல குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதை நம் நாட்டின் பிரதமரே செய்வதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. சரி, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த இறக்குமதிக் கொள்கையில்தான் பிரச்னை என்றே வைத்துக்கொண்டாலும், பெரும்பான்மை பலமுள்ள பா.ஜ.க அரசால் அந்தப் பிரச்னைகளைத் திருத்தி புதிய கொள்கைகளை வகுக்க முடியும்தானே?

அமெரிக்கை நாராயணன்
அமெரிக்கை நாராயணன்

ஓர் ஆட்சியில் செய்த தவற்றை அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி சரிசெய்வதுதானே சரியாக இருக்கும்... அதற்காகத்தானே மக்கள் நம்மை தேர்ந்தெடுக்கிறார்கள்... அதை விட்டுவிட்டு முந்தைய ஆட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டே இருந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்ன... பாதுகாப்பு, பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளைத் தொடர்ந்து தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்னையையும் காங்கிரஸ் பெயரில் எழுதியிருக்கிறது ஆளும் பா.ஜ.க அரசு. உண்மையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை ஆளும் பா.ஜ.க அரசால் கையாள முடியவில்லை என்பதுதான் பிரதமரின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது” என்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா? #DoubtOfCommonMan

``விரைவில் பெட்ரோலையும் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்து தற்காலிகமாக மக்கள் சந்தித்திருக்கும் இந்தச் சிக்கலிலிருந்து நிரந்தரத் தீர்வு கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு முயன்றுவருகிறது. வேளாண் சட்டத் திருத்தங்களைப்போல ஜி.எஸ்.டி தொடர்பான சட்டத்திலும் பிரதமர் மோடி விரைவில் திருத்தங்களை அறிவிப்பார். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன" எனக் கூறிய தமிழக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் இராம ஶ்ரீநிவாசன்,

``காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் விளைவை இந்திய மக்கள் தற்போது வரை அனுபவித்துவருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும். அதுதான் மத்திய அரசின் விருப்பமும்கூட. இதைப் பல நேரங்களில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசியிருக்கிறார். ஆனால், மது மற்றும் பெட்ரோல் விற்பனை மூலம் அதிக லாபம் பெறுவதால் அவை இரண்டுக்கும் பழைய வரி விதிப்பு முறையே நீடிக்க வேண்டும் என மாநிலங்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் தடையாக இருக்கின்றன" என்றார்

இராம ஶ்ரீநிவாசன் பாஜக
இராம ஶ்ரீநிவாசன் பாஜக

மேலும் அவர், ``கொள்கைரீதியான முடக்கம் எங்கெல்லாம் ஏற்பட்டிருகிறதோ, அதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கட்சியாகத்தான் இருந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் ஏற்பட்டிருக்கும் கொள்கை முடக்கங்களையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு சரிசெய்துகொண்டிருக்கிறது. எந்த ஒரு பொருளையும் அதிக விலைக்கு விற்பனை செய்து மக்களை வதைக்க வேண்டும் என்ற ஆசை பா.ஜ.க-வுக்கு துளியும் இல்லை. பெட்ரோல் விற்பனையிலும் பா.ஜ.க-வின் நிலைப்பாடு இதுதான். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை மாநில அரசுகள் காத்திருக்காமல் அவர்கள் விதிக்கும் வரியைக் குறைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களே வரியைக் குறைத்து முன்னுதாரணமாகவும் திகழலாம். அதைச் செய்வார்களா?" என காங்கிரஸ் மீது குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒன்றுக்கொன்று அறிக்கைப் போர்களில் விமர்சித்துக்கொண்டிருப்பதால் ஆகப்போவதொன்றுமில்லை. சாமானிய மக்கள் மீதான விலைவாசிச் சுமையைக் குறைக்க, தேவை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு