2021-22 நிதியாண்டில் பெட்ரோல் 78 முறையும், டீசல் 76 முறையும் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா, ``கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டது என்றும், கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல்மீதான கலால் வரி மூலம் அரசு ஈட்டிய தொகை என்ன என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதற்கு மத்திய அரசு, `பெட்ரோல்-டீசல் விலை 26.06.2010 & 19.10.2014 ஆகிய தேதிகளில் முறையே சந்தை நிலவரப்படி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போதிருந்து, பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள்தான் (OMCs) பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் குறித்து பொருத்தமான முடிவுகளை எடுத்திருக்கின்றன.
ஆனால் 16 ஜூன், 2017 முதல் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசலின் சில்லறை விற்பனை விலையை (ஆர்.எஸ்.பி) அன்றைய விலைப்படி (Daily Revision) தினசரி திருத்தம் செய்வதை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) அமல்படுத்தி வருகின்றன' என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பதிலளித்தார்.
மேலும், கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அரசு 16 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கலால் வரி ஈட்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு மே 21-ம் தேதி, பெட்ரோல்மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல்மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `பெட்ரோல்மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல்மீது லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறையும்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், 2021-22 நிதியாண்டில் டெல்லியில் பெட்ரோல் 78 முறையும், டீசல் 76 முறையும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பெரிய தொழிலதிபர்களின் கடனை அடைக்கப் பொதுமக்களின் பாக்கெட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அரசு பயன்படுத்துகிறது" என்று மத்திய அரசை விமர்சித்தார்.