Published:Updated:

பி.எஃப்.ஐ-க்கு தடை..! - உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது?!

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

இந்த அமைப்பின் செயல்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அந்தவகையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய எட்டு அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.

பி.எஃப்.ஐ-க்கு தடை..! - உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது?!

இந்த அமைப்பின் செயல்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அந்தவகையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய எட்டு அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.

Published:Updated:
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் கடந்த 22-ம் தேதி அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சோதனைக்குக் கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில், பல இடங்களில் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில், இந்தச் சோதனைகளுக்குப் பிறகு விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்தன.  இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலங்கானா ஆகிய எட்டு மாநிலங்களில் பி.எஃப்.ஐ தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 2-வது முறையாகச் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின் போதும் 60 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு.
‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு.

இந்த இரண்டு சோதனைகளின்போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்திருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம்
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம்

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றைச் சீர்குலைக்கும்விதத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல் உட்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பின் கொடிய செயல்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்திருக்கிறது. அந்த வகையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த எட்டு அமைப்புகள்  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின்கீழ் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நிதி வசூல் செய்ததன் காரணமாகவும், இந்த அமைப்பைத் தடைசெய்ய வேண்டும் என உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்தன" எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

இந்த நிலையில், கோவையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அருகே ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதேபோல், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்திவருகின்றனர். தமிழகத்திலும் ரோந்துப் பணியையும், கண்காணிப்பு பணியையும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.