Published:Updated:

`தலைமைச் செயலக ஊழியர்; முதல்வர் நிகழ்ச்சிகளை கவர் செய்தவர்!’- அரசு புகைப்படக் கலைஞருக்குக் கொரோனா

முதல்வர் அணை திறப்பு நிகழ்ச்சி
முதல்வர் அணை திறப்பு நிகழ்ச்சி ( எம்.விஜயகுமார் )

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாகச் சேலம் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாகச் சேலம் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். அவரோடு வந்த அரசு புகைப்படக்காரர் ஒருவருக்கும் செக்யூரிட்டி இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகைப்படக்காரர்கள்
புகைப்படக்காரர்கள்

கடந்த 3 நாள்களாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சேலம் ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு விழா நிகழ்ச்சி, எடப்பாடியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அவர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர், நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோருக்குக் கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் கொரோனா அச்சத்தில் இருக்கிறார்கள்.

இதையடுத்து இன்று காலையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ள திருவாகவுண்டனூர் பைபாஸ் ஏரியா முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியை மேண்கொண்டதோடு கிருமி நாசினிகளையும் தெளித்து வருகிறார்கள். 26 அரசு உயர் அதிகாரிகளைத் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் விசாரித்தோம். ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பதற்காக சென்னையிலிருந்து சேலம் வந்த போது அவரோடு வந்த அரசு புகைப்படக்காரர் சுப.மோகன் என்பவருக்கும், செக்யூரிட்டிகள் இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது.

பாலம் திறப்பு
பாலம் திறப்பு

அதையடுத்து இவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சேலத்தில் முதல்வர் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். குறிப்பாகச் சென்னை அரசு புகைப்படக்காரர் சுப.மோகன் சேலம் பத்திரிகையாளர்களோடு இணைந்து முதல்வரின் ஃபங்ஷனை கவர் செய்துள்ளார். அதனால், சேலத்தில் உள்ள பல பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பு உள்ளது'' என்றனர்.

இதுபற்றி சேலம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் நிர்மல்சனிடம் கேட்டதற்கு,``சென்னையிலிருந்து வந்த போட்டோ கிராஃபர் ஒருவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். மற்றவர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ் இருப்பதுபோல தெரியவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு