Published:Updated:

பினராயி விஜயன் 2.0: மீண்டும் சிவந்தது கேரளம்!

பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
பினராயி விஜயன்

எதிர்க் கருத்துகளுக்கு மதிப்பளித்து சரியான நடவடிக்கை எடுக்கும் பினராயி விஜயனின் பண்பை கேரள மக்கள் உணர்ந்ததால், எல்.டி.எஃப் கூட்டணிக்கு மீண்டும் அமோக வெற்றியைத் தந்திருக்கிறார்கள்

பினராயி விஜயன் 2.0: மீண்டும் சிவந்தது கேரளம்!

எதிர்க் கருத்துகளுக்கு மதிப்பளித்து சரியான நடவடிக்கை எடுக்கும் பினராயி விஜயனின் பண்பை கேரள மக்கள் உணர்ந்ததால், எல்.டி.எஃப் கூட்டணிக்கு மீண்டும் அமோக வெற்றியைத் தந்திருக்கிறார்கள்

Published:Updated:
பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
பினராயி விஜயன்

‘உறப்பாணு எல்.டி.எஃப்’ என்ற கோஷத்தை முன்வைத்து கேரளத்தில் களம்கண்டது சி.பி.எம் கூட்டணி. அவர்கள் கூறியபடி எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சியை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதால், ‘மீண்டும் சிவந்தது கேரளம்’ என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் தோழர்கள்!

கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள். 71 இடங்களைக் கைப்பற்றினால், ஆட்சி அமைக்கலாம். கடந்த தேர்தலில் 91 தொகுதிகளில் வெற்றிபெற்று சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் ஆட்சி அமைத்தது. இந்த முறை கூடுதலாகக் கிடைத்த எட்டு தொகுதிகளுடன் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று கெத்து காட்டியுள்ளது. எமெர்ஜென்சிக்குப் பிறகு, கேரளத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சி அதைத் தக்கவைப்பதில்லை என்ற வரலாற்றை மாற்றியிருக்கிறது சி.பி.எம் கூட்டணி. இந்த வெற்றிக்கு சூத்ரதாரி என பினராயி விஜயனைக் கொண்டாடுகிறார்கள் தோழர்கள்.

அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘எதிர்க் கருத்துகளுக்கு மதிப்பளித்து சரியான நடவடிக்கை எடுக்கும் பினராயி விஜயனின் பண்பை கேரள மக்கள் உணர்ந்ததால், எல்.டி.எஃப் கூட்டணிக்கு மீண்டும் அமோக வெற்றியைத் தந்திருக்கிறார்கள். தொழில்துறை அமைச்சராக இருந்த இ.பி.ஜெயராஜன் தன் உறவினருக்கு வேலை கொடுத்ததாகச் சர்ச்சை உருவானது. இதையடுத்து, அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பினராயி விஜயன். கோர்ட்டில் இ.பி.ஜெயராஜன் மீதான குற்றச்சாட்டு தவறானது என நிரூபணமான பிறகே மீண்டும் அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். சபரிமலை விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்துவேன் என முதலில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சி.பி.எம் கூட்டணியை மக்கள் புறக் கணித்தார்கள். 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே எல்.டி.எஃப் வென்றது. மக்கள் மனதைப் புரிந்துகொண்ட பினராயி விஜயன், ‘சபரிமலை மறுசீராய்வு மனுவில் கோர்ட் என்ன தீர்ப்பு சொன்னாலும், மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே அது அமல்படுத்தப்படும்’ என அதிரடியாக அறிவித்தார். இது, சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரசாரங்களை வலுவிழக்கச் செய்தது.

பினராயி விஜயன் 2.0: மீண்டும் சிவந்தது கேரளம்!

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷுடன், தன் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் தொடர்பிலிருந்தது உறுதியானதும், அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதால், பெங்களூரில் கைதுசெய்யப்பட்டார். அந்த விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியதால், கட்சிப்பணியிலிருந்து கொடியேரி பால கிருஷ்ணனை நீண்ட விடுப்பில் செல்லவைத்தார். உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த ஜலீல் தன் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி உறவினருக்கு அரசு வேலை வழங்கியதாக, சட்ட சபைத் தேர்தல் முடிந்த பிறகு லோக் ஆயுக்தா தீர்ப்பு வழங்கியது. தேர்தல்தான் முடிந்துவிட்டதே என நினைக்காமல், ஜலீலை ராஜினாமா செய்யவைத்தார் பினராயி விஜயன்.

‘நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்; என்மீது தவறு இருந்தாலும் சொல்லுங்கள். ஆனால், நீங்களாக ஒரு கதையை உருவாக்காதீர்கள்’ என்று பத்திரிகையாளர்களிடம் அடிக்கடிச் சொல்வார் பினராயி விஜயன். எதிர்க்கருத்துகள் வந்தால் அதற்கு மதிப்பளித்து, உண்மைத்தன்மையை ஆராய்ந்து, சரியான முடிவுகளை எடுத்ததால்தான் பினராயி விஜயன் சரித்திர வெற்றியை நிகழ்த்தியிருக்கிறார்’’ என்றார்கள்.

‘‘2017-ல் ஒக்கி புயல், 2018-ல் மழை வெள்ளப் பிரளயம், 2019 நிபா வைரஸ், 2020-ல் கொரோனா வைரஸ் என அடுக்கடுக்காக நெருக்கடிகள் வந்தபோதும், அடித்தட்டு மக்களைக் கைவிடாமல் அரவணைத்தார் பினராயி விஜயன். காங்கிரஸ் ஆட்சியில் 18 மாதங்களாக வழங்காமல் இருந்த பென்ஷன் நிலுவையை 2016-ல் ஆட்சிக்கு வந்ததும் வழங்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை என 52,000 இலவச வீடுகள் கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்டன. எல்.டி.எஃப் ஆட்சியில் ‘லைஃப் மிஷன்’ என்ற திட்டத்தைத் தொடங்கி, பாதியில் நின்ற வீடுகளையும் சேர்த்து 2,14,262 இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. மழை வெள்ளப் பிரளயம் தொடங்கியதிலிருந்து கொரோனா தொற்று வரை, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் மளிகைப் பொருள்கள் அடங்கிய கிட் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. தேர்தல் முடிந்த பிறகுகூட 1,700 ரூபாய் என இருந்த கொரோனா ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை 500 ரூபாயாகக் குறைத்துள்ளது கேரள அரசு. இது அடித்தட்டு மக்களின் அரசாக விளங்கியதால், மக்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர்’’ என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.-

வலுவிழந்த கை... பூக்காத தாமரை!

கடந்த 2016 தேர்தலில், நேமம் தொகுதியில் தன் கணக்கைத் தொடங்கிய பா.ஜ.க., இந்த முறை ‘புதிய கேரளம் மோடிக்கு ஒப்பம்’ (கேரளம் மோடியுடன்) என்ற கோஷத்துடன் களமிறங்கியது. பாலக்காட்டில் ‘மெட்ரோ மேன்’ தரன், திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபி, நேமத்தில் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் ஆரம்பத்தில் முன்னிலை முகம் காட்டினார்கள். ஆனால், படிப்படியாக வாக்கு எண்ணிக்கை குறைந்து இறுதியில் தோல்வியைத் தழுவியதால், தாமரை பூக்காமல் பூஜ்ஜியம் ஆகிவிட்டது.

காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியில், ‘அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் நான்தான்’ என முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கும் இடையே குடுமிப்பிடிச் சண்டை நடந்தது. ‘நாடு நந்நாகான் யு.டி.எஃப்’ (நாடு நன்றாக மாற யு.டி.எஃப்) என்ற கோஷத்தை முன்வைத்த காங்கிரஸ், டெல்லியின் வழிகாட்டுதல்படி தேர்தல் குழுவும் அமைத்தது. ஆனால், கடந்த முறை கிடைத்த 47 இடங்களில் மேலும் ஆறு குறைந்து 41 இடங்களே மிஞ்சின.