சினிமா
Published:Updated:

பினராயி மாற்றிய வரலாறு!

பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
பினராயி விஜயன்

கேரளாவில் இந்த முறை பலமாகக் காலூன்ற நினைத்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கனவு, கனவாகவே முடிந்திருக்கிறது.

“ஐந்து வருடங்களுக்கு முன், இங்கே நேமம் தொகுதியில் பா.ஜ.க தன் கணக்கைத் தொடங்கியது. இந்த முறை அந்தக் கணக்கு முடிக்கப்படும்.”

தேர்தலுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சொன்ன வார்த்தைகள் இவை. ஏதோ தபால் நிலையச் சேமிப்புக் கணக்கை முடிப்பதுபோல அவர் சொன்னாலும், அதை எந்தவிதச் சிக்கலுமின்றி நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.


கேரள சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றிருக்கிறது பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை வென்றுள்ள இந்தக் கூட்டணி மூலம் மீண்டும் கேரளாவின் முதல்வராகியிருக்கிறார் பினராயி விஜயன். கேரளாவில் இந்த முறை பலமாகக் காலூன்ற நினைத்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கனவு, கனவாகவே முடிந்திருக்கிறது. 2016-ல் அவர்கள் வென்ற நேமம் தொகுதியும் இன்று அவர்களின் கையை விட்டுப் போயிருக்கிறது. இத்தனைக்கும் பா.ஜ.க-வின் கூட்டணியில் பல புகழ்பெற்ற முகங்கள் இடம்பெற்றிருந்தன. பாலக்காட்டுத் தொகுதியில் போட்டியிட்ட மெட்ரோமேன் ஸ்ரீதரன், நேமம் தொகுதி கும்மனம் ராஜசேகரன், திருச்சூர்த் தொகுதி சுரேஷ் கோபி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாகப் பார்க்கப்பட்டனர். தொடக்கத்தில் முன்னிலைபெற்ற இவர்கள் பின்னர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் கேரளாவில் மொத்தமுள்ள 20 இடங்களில் 19 இடங்களில் வென்று சாதனை படைத்தனர். அப்போதே ‘அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான்’ என்ற பேச்சு எழுந்தது. தோசையைத் திருப்பிப் போடுவதுபோல ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சியை இறக்கிவிட்டு, எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு தருவதே கேரள மக்களின் வழக்கம். இடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி முன்னணி பெருவெற்றி பெற்றது. அப்போதே, ‘வரலாறு மாறி பினராயி மீண்டும் முதல்வர் ஆகிவிடுவார்’ என்று யூகங்கள் பேசப்பட்டன. பல சவால்களோடுதான் அவர்கள் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டனர். பினராயி விஜயன் அந்த யூகங்களை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறார். மீண்டுமொரு முறை அங்கே செங்கொடி பறந்திருக்கிறது.

இது எப்படிச் சாத்தியமானது?

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி யடைந்தாலும், கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகப் பெயர்பெற்றுவிட்ட பினராயி அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவு சுலபமாகக் கிடைத்தது. இதைத் தாண்டி காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஜோஸ் கே.மணி தலைமையிலான கேரளக் காங்கிரஸ் (எம்) கட்சியை இடதுசாரிக் கூட்டணிக்கு இழுத்தார் பினராயி விஜயன். உள்ளாட்சித் தேர்தலில் பெருமாற்றத்தைக் கொண்டு வந்தது அது. முக்கியமாக, சிறுபான்மையினரின் வாக்குகளைச் சுலபமாக வென்றெடுத்தது. கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா ஆகிய மாவட்டங்களில் அதிக வாக்குகள் பெற்றதற்குக் கேரளக் காங்கிரஸுடனான (எம்) இந்தக் கூட்டணி முக்கியக் காரணம்.

இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் இதே ஃபார்முலாவைத்தான் கையாண்டது இடதுசாரிக் கூட்டணி. கேரளாவிலுள்ள 45 சதவிகித சிறுபான்மையினரின் வாக்குகள்தான் எல்.டி.எஃப்-ஐ ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற வைத்திருக்கின்றன. அதே சமயம், சபரிமலை விவகாரம், தீவிர இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தியது போன்றவை பா.ஜ.க-வின் கூட்டணிக்கு மக்களின் ஆதரவைக் கிடைக்காமல் செய்திருக்கின்றன. காங்கிரஸும் சபரிமலை விவகாரத்தில் மிதவாத இந்துத்துவா ஆதரவைக் கையிலெடுக்க, அவர்கள் பல வருடங்களாக உருவாக்கி வைத்திருந்த ‘இடதுசாரிக்கான மாற்று’ என்ற பிம்பம் முற்றிலுமாக அடிபட்டுப்போனது. அதேபோல் ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டும், சி.பி.ஐ(எம்) எடுத்த கொரோனா நிவாரண மற்றும் தடுப்புப் பணிகளின் முன்னால் பெரிதாக எடுபடாமல்போனது. இதுதான் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவையும் 60,963 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்ய வைத்திருக்கிறது.

பினராயி மாற்றிய வரலாறு!

எதிர்க்கட்சிக்கு என்ன சவால்?

இந்தத் தோல்வி தொடர்ந்து பின்தங்கியிருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஓர் ஆறாத வடுவைக் கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தி சுழன்று சுழன்று பிரசாரம் செய்த கேரளம் இன்று அவரைக் கைவிட்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக முன்னிறுத்தப்பட்ட ரமேஷ் சென்னித்தலாவின் பிரசாரங்களும்

திட்டங்களும் எடுபடாமல்போயிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் திறம்படச் செயல்படாததுதான். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் ரமேஷ் சென்னித்தலாவுக்கு இணக்கமாகவும் ஆதரவாகவும் இல்லாமல்போனது பெரும்பின்னடைவாக மாறிப்போனது.

அதேபோல் கொரோனாவின்போதும் சரி, 2019 கேரள வெள்ளத்தின்போதும் சரி, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாகச் சென்று மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்திச் செயல்பட்ட பினராயி விஜயன் அரசை மக்களே முழுமனதோடு டிக்கடித்திருக்கின்றனர். ஆம், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியில் பாடம் கற்ற ஆளும் அரசு திருப்பியடித்திருக்கிறது. ஆனால், அந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியே அங்கே காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சலசலப்பை ஏற்படுத்த, கேரளா மீண்டுமொரு முறை இடதுசாரிகள் பக்கம் சாய்ந்திருக்கிறது.