Published:Updated:

``உண்ணாவிரதம் முதல் உச்ச நீதிமன்றம் வரை" - சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடரும் பினராயி அதிரடிகள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் கேரளா முன்னணியில் இருந்து வருகிறது. பினராயி விஜயன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

பினராயி
பினராயி

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ, அதோடு சேர்ந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றையும் செயல்படுத்த மாட்டோம் என அறிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக வாக்களித்த நிதிஷ் குமார், ஜெகன் மோகன், நவீன் பட்நாயக் போன்றவர்களுமே என்.ஆர்.சியை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள்

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் சி.ஏ.ஏ - என்.பி.ஆரை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் கேரள மாநிலம் ஒன்றுபட்டு முன்னணியில் இருந்து வருகிறது. சி.ஏ.ஏ-வை எதிர்ப்பதில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கூட எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்கையில், கேரளாவில் பா.ஜ.க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனே கேரளாவின் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன. முதல்வர் பினராயி விஜயன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியிருந்தார். அப்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் பேசியதோடு கேரளாவில் சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

கேரளா
கேரளா

சி.ஏ.ஏ தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். பா.ஜ.க தவிர அனைத்துக் கட்சிகளும் இதில் கலந்துகொண்டன. அதோடு நாட்டில் தற்போதுள்ள பதற்றமான சூழ்நிலை பற்றி விவாதிக்க பல சிவில் அமைப்புகளுக்கும் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்ததோடு மத்திய அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

``இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கருத்துரிமை கிடையாதா'' - சட்டம் சொல்வது என்ன?

பா.ஜ.க-வின் ஒரு எம்.எல்.ஏ மட்டும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார். என்.ஆர்.சி-க்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் என்.பி.ஆர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் மாநிலத்தில் நிறுத்தி வைப்பதாக கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவைத் தொடர்ந்து மற்ற மாநில சட்டப்பேரவைகளும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 11 முதலமைச்சர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தார் பினராயி விஜயன். இதைப் பாராட்டியிருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசும் இதைப் பின்பற்றி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அ.தி.மு.க அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சி.பி.எம் - பி.ஜே.பி
சி.பி.எம் - பி.ஜே.பி

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்ற போதிலும் கேரள அரசு அதைச் செய்தது. மற்ற மாநிலங்களும் இதுபோலச் செய்தால் அது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார். சி.ஏ.ஏ-வை தடுத்தால் கேரளாவுக்கு ரேஷன் பொருள்கள் தர மாட்டோம் என பா.ஜ.க தலைவர் கோபால கிருஷ்னன் தெரிவித்து சர்ச்சையில் மாட்டியிருந்தார்.

தற்போது அடுத்த அதிரடியாக சி.ஏ.ஏ-வை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன. சி.ஏ.ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற முதல் மாநில அரசாகக் கேரள அரசு இருக்கிறது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுமே சி.ஏ.ஏ-வை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒரு மாநில அரசு செய்வது இதுவே முதல்முறை.

பினராயி
பினராயி

மத்திய அரசின் அதிகாரத்தில் வரக்கூடிய ஒரு சட்டத்தை மாநில அரசு எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கும், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாட்டுக்கு எதிராகவும் இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 131-ன் கீழ் இந்த வழக்கை கேரள அரசு தொடுத்துள்ளது. பிரிவு 131-ன் கீழ் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான விஷயங்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் உள்ளது.

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான அதிரடிகளில் தொடர்ந்து கேரளா முன்னணியில் இருந்து வருகிறது. பினராயி விஜயனின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும் என்பது பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.