Published:Updated:

`இது பாஸிஸ்ட் மனோபாவம்..!'- கர்நாடக போலீஸின் செயலால் கொதித்த பினராயி விஜயன்

செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் உபகரணங்களை ஆயுதங்களாக சித்திரிக்க முயற்சி செய்கிறார்கள். செய்தியாளர்கள் மீதான அடக்குமுறை பாஸிஸ்ட் மனோபாவமாகும்.

கேரள செய்தியாளர்களை தடுக்கும் கர்நாடகா போலீஸ்
கேரள செய்தியாளர்களை தடுக்கும் கர்நாடகா போலீஸ்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்துவருகிறது. வட மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறைகளும் அரங்கேறின. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்தது. அதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டுபேர் இறந்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்கள் ஏழுபேர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களிடம் கேரளத்தைச் சேர்ந்த ஏழு செய்தியாளர்கள் தகவல் சேகரித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் அடையாள அட்டை கேட்டுள்ளார். அவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்ததற்கு அரசு வழங்கும் அக்கடேசன் கார்டை காட்டுங்கள் எனக் கூறியுள்ளார் அந்த போலீஸ் அதிகாரி.

அவர்களிடம் அரசு அக்கடேசன் கார்டு இல்லாததால் அவர்களிடமிருந்த கேமரா, மொபைல் போன் மற்றும் செய்தி சேகரிப்பதற்கான உபகரணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்களைக் கைது செய்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலுடன் வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

செய்தியாளர்கள் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியதாகவும் அதனால் அவர்களைப் பிடித்து வைத்துள்ளதாகவும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கர்நாடகா போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செயலுக்கு கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் உபகரணங்களை ஆயுதங்களாக சித்திரிக்க முயற்சி செய்கிறார்கள். செய்தியாளர்கள் மீதான அடக்குமுறை பாஸிஸ்ட் மனோபாவமாகும். இதற்கு எதிராக மக்கள் குரல் உயர வேண்டும். செய்தியாளர்களை விடுவிப்பது சம்பந்தமாக கேரள டி.ஜி.பி. கர்நாடகா போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

இதற்கிடையில் மங்களூரில் போராட்டம் நடத்துவதற்கு காரணம் கேரளக்காரர்கள் என கர்நாடகா உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் சில அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.