Published:Updated:

`கேரளாவில் தடுப்பு மையம் வராது!’- #CAA-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பினராயி

பினராயி விஜயன்
பினராயி விஜயன் ( twitter )

`நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத் திருத்தம் சமூக மக்களுக்குக் கவலையை அளித்துள்ளது' என்று சட்டசபையில் பினராயி விஜயன் பேசினார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்களின் முதல்வர்களும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

கேரள மாநில சட்டசபையில் பேசிய பினராயி விஜயன், ``கேரளாவின் மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் உள்ளிட்டோர் இந்த நிலத்துக்கு வந்துள்ளனர். ஆரம்பகாலத்திலேயே கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இங்கு வந்துள்ளனர். எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் நம்முடைய பாரம்பர்யம். நம்முடைய சபை, பாரம்பர்யத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். கேரளாவில், அகதிகள் தங்குவதற்கான தடுப்பு மையங்கள் கண்டிப்பாக வராது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது சமத்துவத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத் திருத்தம் பல்வேறு சமூக மக்களுக்குக் கவலையை அளித்துள்ளது. பல மாநிலங்களில் இதுதொடர்பான போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் அமைதியான முறையில் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமையை வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை விளக்கும் இந்தச் சட்டத் திருத்தம் அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது” என்றார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மேலும், ``அரசியலமைப்பு என்பது நவீன ஜனநாயகத்தின் சாரம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு வடிவம்பெற்றது. இந்திய தேசியவாதம் என்பது பல்வேறு மக்களின் கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை மையமாகக் கொண்டது" என்று பேசியுள்ளார்.

பினராயி விஜயன் நிறைவேற்றிய தீர்மானத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்த்தார். ``இது குறுகிய அரசியல் மனப்பான்மையைக் காட்டுகிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு