Published:Updated:

`கொரோனா வார்டில் இருந்த அந்த இளைஞரின் தியாகம் பாராட்டத்தக்கது!' -நெகிழும் பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கோட்டயத்தில் உள்ள தந்தையைக் காண வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞர் லினோ ஆபேல் என்பவர் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்பிரிவில் அட்மிட் ஆனார்.

சீனாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய சமயத்தில் கேரள மாநிலத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி பராமரித்ததால் கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில், மீண்டும் கொரோனா கேரளத்தில் பரவி வருகிறது. கொரோனா குறித்த தகவல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா ஆகியோர் அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்கிறது. மேலும் இரண்டு பேருக்கு திருவனந்தபுரத்தில் கொரோனா பாதித்துள்ளது. இதுவரை கேரளத்தில் 22 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதில் 19 பேர் சிகிச்சையில் உள்ளனர். வர்கலா ரிசாட்டில் வசித்த இத்தாலிக்காரர் ஒருவருக்கும், கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளது.

கொரோனா
கொரோனா

கேரளத்தில் மொத்தம் 5,748 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். 5,191 பேர் வீடுகளிலும், 277 பேர் மருத்துவமனையிலும் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். புதிதாக 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. நமது மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றன. சுற்றுலாத்துறை சார்பில் ஹோட்டல்கள், ரிசாட்டுகள் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களைச் சோதித்து தொற்று இல்லை என உறுதி செய்கிறோம். அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஆய்வு ரிசல்ட்டில் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம். நாட்டில் முதல் மரணம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அதனால் தொடர்ந்து அங்கு படிக்கும் கேரள மாணவர்கள் இங்குவர விரும்புகிறார்கள். அவர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

எல்லா நாடுகளிலும் கேரள மாநில மக்கள் வசிக்கிறார்கள். கேரளத்தின் வெளியில் பெரும் எண்ணிக்கையில் நம் மக்கள் வசிக்கிறார்கள். விமானத்தில் வருபவர்களையும், ரயிலில் வருபவர்களையும் சோதிக்க முடிவு செய்துள்ளோம். இதனுடன் எல்லைப்பகுதிகளில் மக்கள் வரும்பகுதிகளில் அவர்களையும் சோதிக்க காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பில் இருப்பவர்களை பரிசோதித்து தொற்று இல்லை என தெரியவந்தால் அவர்கள் சாதரண மனிதர்களைப் போல நடமாடலாம்.

மத்திய அரசு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை அழைக்க விமானம் அனுப்புவது நல்ல நடவடிக்கை. நம் சகோதரர்களுக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் இங்கு வருவதற்கு உரிமை உண்டு. நாம் ஒன்றாக நின்றால் இங்கு நல்லபடியாக வாழலாம். நம் மாநிலத்தில் நிபா வைரஸ் வந்தபோது நாம் ஒன்றாக எதிர்கொண்டோம். கொரோனா காற்றில் பரவுவதில்லை, தொடுதல் மூலம் வருகிறது. எனவேதான் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கொரோனா அறிகுறி உள்ளவர்களை வற்புறுத்தி தனிமைப்படுத்தவில்லை. கொரோனா பாதித்தவர்கள் அவர்களாகவே வருகிறார்கள். நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

கொரோனா வார்டில் லினோ ஆபேல்
கொரோனா வார்டில் லினோ ஆபேல்

கோட்டயத்தில் உள்ள தந்தையைக் காண வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞர் லினோ ஆபேல் என்பவர் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்பிரிவில் அட்மிட் ஆனார். அவரின் தந்தை ஆபேல் இறந்துபோனதால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்டு சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளியிட்டார். அவரது தியாகம் பாராட்டத்தக்கது. கொரோனா பாதிப்பு குறித்து 16-ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு