Published:Updated:

மாநிலத்தின் சூழல் சரியில்லை; ரூ.113 கோடி விலக்கு வேண்டும் - ராஜ்நாத்சிங்கிற்கு பினராயி விஜயன் கடிதம்

சத்யா கோபாலன்

`கேரள பேரிடர்களுக்கு மத்திய அரசு வெறும் 2,904 கோடி ரூபாய் மட்டுமே நிதி அளித்துள்ளது’ என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கடந்த 2017-ம் ஆண்டு ஒகி புயல் கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த வருடமே அதாவது 2018-ம் ஆண்டு பெய்த பருவ மழையில் மொத்த கேரளாவும் வெள்ளத்தில் மிதந்தது என்றே கூற வேண்டும். இந்த இரண்டு பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய அந்த மாநிலத்துக்கு 31,000 கோடி ரூபாய் தேவைப்படும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

கேரள வெள்ளம்
கேரள வெள்ளம்

இந்த நிலையில், இந்தப் பேரிடர்களிலிருந்து மக்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை உதவியது. இந்தப் பணிகளுக்கு விமானப்படைக்கு 113 கோடி ரூபாய் செலவானதாகவும் அந்தப் பணத்தை கேரள அரசு செலுத்த வேண்டும் என்றும் பாதுகாப்புப் படை கேரள அரசிடம் கேட்டுள்ளது.

இதையடுத்து, `தற்போது மாநிலம் இருக்கும் நிலையில், அவ்வளவுத் தொகையைச் செலுத்த முடியாது. அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என முதல்வர் பினராயி விஜயன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இது தொடர்பாக பினராயி எழுதியுள்ள கடிதத்தில், ``கடந்த இரண்டு வருடங்களாக மாநிலம் கடுமையான பேரிடரைச் சந்தித்துள்ளது. கேரளாவைச் சரிசெய்ய 31,000 கோடி ரூபாய் தேவைப்படும் என ஐ.நா தெரிவித்துள்ளது. தற்போது மாநிலம் உள்ள சூழலில், விமானப்படை கேட்கும் அவ்வளவு பெரிய தொகையைத் தருவது மிகவும் கடினம். எனவே, கேரளாவின் தற்போதைய நிலையைக் கருத்தில்கொண்டு 113 கோடி ரூபாய் அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.