துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை புதுச்சேரிக்கு வருகை தந்தார். ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.7.65 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதற்கடுத்து மாலை அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்ற அவர், நேற்று இரவு கடற்கரை சாலையிலுள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தங்கினார். ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (ரூசா) திட்டத்தின் கீழ், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் புதுச்சேரி, பிள்ளைச்சாவடியில் 35 ஆண்டுகளாக 280 ஏக்கரில் செயல்பட்டுவரும் அரசுப் பொறியியல் கல்லூரியை, இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்தது.
ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து அரசிதழிலும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, ``இதுதான் புதுச்சேரியின் முதல் மாநிலப் பல்கலைக்கழகம். பொறியியல் கல்லூரி தற்போது பல்கலைக்கழகமாகத் தரம் உயர்ந்திருக்கிறது. வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா வளர்ந்துவரும் நாடாக இருக்கும்போது பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, இங்கு 23 சதவிகிதத்தினர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்க்ள். அது மிகப்பெரிய சவால். அவர்களை மேம்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு அனைவருக்கும் கல்வியறிவு அளிக்கத் திட்டம் கொண்டு வரப்பட்டும், தற்போதும் 20% மக்கள் கல்வி கற்காத சூழலில் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅத்துடன் பாலினப் பாகுபாடு, சமூகத்தில் மக்களிடம் பாகுபாடு ஆகியவை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். தற்போது பருவநிலை மாற்றம் வளர்ந்த நாடுகளில் பெரும்பாதிப்பாக இருக்கிறது. குறிப்பாக வெப்பநிலை உயர்வு, வெள்ளம் ஆகியவை அதிகரித்துள்ளன. பிரான்ஸில் நடந்த மாநாட்டில் பருவச்சூழல் மாற்றம் குறித்து விவாதித்தபோது, அனைவரும் இயற்கைச் சூழலை காக்க ஒன்றுபட வலியுறுத்தப்பட்டது. இதனால் நாம் வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும். ஆரோக்கியமான உணவு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு, கலாசாரம் ஆகியவை எதிர்காலத்துக்கு தேவையான ஒன்று. குறிப்பாக பீட்சா, பர்க்கர் நம் சூழலுக்கு உகந்தவை அல்ல.
நம் உணவே சிறந்தது. உடற்பயிற்சி அவசியம். அதனால் மனவளம் மேம்படும். பெண்களுக்கு சமவாய்ப்பு தர வேண்டும். ஆண், பெண் பாகுபாடு கூடாது. சரியான வாய்ப்பு தந்தால் இளைஞர்கள் முன்னேறுவார்கள். உலக அளவில் இலவச தடுப்பூசி இந்தியாவில்தான் நடக்கிறது. தேர்தலில் பூத் சிலிப் தருவதுபோல் மக்கள் பிரதிநிதிகள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி விஷயத்தில் பணியாற்றுவது அவசியம். நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளான அரவிந்தர், பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன் ஆகிய முக்கியத் தலைவர்களின் வாழ்க்கையை இளைஞர்கள் தெரிந்துகொள்வது அவசியம். அது பாடநூலிலும் இடம்பெற வேண்டும். தங்கள் வாழ்க்கை விவரங்களை ஆங்கிலேயர்கள் பாடத்திட்டத்தில் இணைத்துவிட்டனர். அவர்கள் நாட்டு வீரர்கள் குறித்து அறிந்துகொள்வதைவிட நம்முடைய வீரர்கள் குறித்து அறிந்துகொள்வது அவசியம்” என்றார்.