Published:Updated:

வேலுமணி விவகாரம்: தொடரும் `ரெய்டுகள்’... விசாரணை வளையத்தில் அதிகாரிகள்!

வேலுமணி
வேலுமணி

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல, வேலுமணி விவகாரம் முதல் ரெய்டுடன் முடியப்போவதில்லை. மேலும் இரண்டு கட்டங்களாக ரெய்டு நடத்துவதே லஞ்ச ஒழிப்புத்துறையினரின் திட்டம்.

ஊழல் வழக்கில் ரெய்டு நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணியின் லாக்கர், வங்கிக் கணக்கு ஆகியவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் முடக்கப்பட்டுள்ளன. இந்த ரெய்டுகளின் இரண்டாம் கட்டம், திடுக்கிடும் திருப்பங்களை ஏற்படுத்தப்போவதாக பேச்சு எழுந்துள்ளது. ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அதில் இடம்பெறும் பிரமுகர்கள், நிறுவனங்கள் மீது அடுத்தகட்ட அஸ்திரத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பாய்ச்சத் தயாராகிவருகிறார்கள். இதற்கிடையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி தற்போது களையெடுப்பில் பிஸியாக இருக்கிறாராம். `ரெய்டுக்கு முன்பு தகவல் லீக் ஆனது யாரால்?’ என்று ரகசிய விசாரணை நடத்தினாராம். பிறகு, நீண்டகாலம் இந்தத் துறையில் பணியில் இருந்தவர்கள், கடந்த ஆட்சியில் கொங்கு அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று லிஸ்ட் எடுத்து அவர்கள்மீது பணிமாற்ற நடவடிக்கை எடுத்துவருகிறாராம்.

எஸ்.பி. வேலுமணி வீடு
எஸ்.பி. வேலுமணி வீடு

கடந்த அ.தி.மு.கழக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, கொரோனா சீஸன் பொருள்களான சுண்ணாம்பு பவுடர், பினாயில் கொள்முதலில் தொடங்கி ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் 810 கோடி ரூபாய் அளவில் வேலுமணி தரப்பினர் கொள்ளையடித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த புகார்களை மேற்கோள்காட்டி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த சில நாள்களாக ரெய்டில் இறங்கினர். சுமார் 60 இடங்களில் ரெய்டு நடந்தது. 13.08 லட்சம் ரூபாய் ரொக்கம், கம்ப்யூட்டர் டிஸ்க், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி வைப்புத்தொகை ஆவணங்கள் வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கின.

வேலுமணியை மையமாகவைத்து நடந்த ரெய்டில் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள், பினாமிகள் என்று பல்வேறு தரப்பினரிகளிடம் ரெய்டு நடந்தது. ஆனால், ஊழலுக்கு ரூட் போட்டுக்கொடுத்த அதிகாரிகள் மிக சொற்பமானவர்களே ரெய்டில் சிக்கினர். இந்த ரெய்டின்போது கிடைத்த ஆவணங்களைத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறார்கள். ரெய்டில் சிக்கியவர்களில் அரசு அதிகாரிகள் அல்லாதவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தபோது, `நடந்த முறைகேடுகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதிகாரிகள்தான் பொறுப்பு’ என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள். இதை மையமாகவைத்து இனி வரும் நாள்களில் ரெய்டு, சம்மன், விசாரணை என்று சூடுபிடிக்கவிருக்கிறது.

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அமைச்சர் பதவியிலிருந்த காலகட்டத்தில் அவர் கவனித்த அரசுத்துறைகளின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஹன்ஸ் ராஜ் வர்மா, பிரகாஷ், ஹர்மந்தர் சிங், மகேஷ்வரன் உள்ளிட்ட சிலரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தவிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை டீம்.

லஞ்ச ஒழிப்புத்துறையைச்சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, ``கான்ட்ராக்ட் விஷயங்களில் அமைச்சர் தரப்பினர் சட்டத்தை மீறச் சொன்னபோது, அதை கனகச்சிதமாக, விஞ்ஞான முறைப்படி செய்தவர்கள் சில முக்கிய அதிகாரிகள். அவர்களை நாங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரவிருக்கிறோம்'' என்கிறார்கள்.

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகராட்சி நிர்வாகத்துறையில் கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக அரசு ஒதுக்கிய பணம் எவ்வளவு, உள்ளாட்சி அமைப்புகளின் கஜானாக்களில் நடந்த முறைகேடுகள் போன்ற விவரங்களைச் சேகரித்துவருகிறார்கள். கிட்டத்தட்ட பல மாநகராட்சிகள் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. அங்கெல்லாம் டம்மி பதவியில் மாற்றப்பட்டவர்களிடம் விசாரணை ஆரம்பித்துள்ளனர். இதிலும் மதுரை மாநகராட்சியில் பணியில் இருந்த முக்கிய அதிகாரி ஒருவர் மீது நிறைய புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. அதேபோல், சென்னை மாநகராட்சியில் பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரின் கடந்தகாலப் பின்னணிகளும் துருவப்பட்டுவருகின்றன.

வேலுமணி
வேலுமணி

சென்னை மாநகராட்சியின் தலைமை இன்ஜினீயர் நந்தகுமார், ரிட்டயர்டு தலைமை இன்ஜினீயர் புகழேந்தி உள்ளிட்ட சிலரது வீடுகளில்தான் ரெய்டு நடந்தது. வேறு சிலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நெருங்கவில்லை. உதாரணத்துக்கு, பழநியை நினைவுபடுத்தும் அதிகாரி ஒருவர் கட்டட பிளான் அப்ரூவல் தொடர்பான பிரிவை கவனித்து வந்தார். சென்னையிலுள்ள அனைத்து பில்டர்களுக்கும் அறிமுகமானவர். சென்னை தி.நகரில் ஒரு பெரிய அபார்ட்மென்ட்டை வாடகைக்குப் பிடித்து மாநகராட்சி ஃபைல்களுடன் ஓய்வுபெற்ற மாநகராட்சி அதிகாரிகளைவைத்து தனியாக அலுவலகம் நடத்திவந்தார். சென்னையிலுள்ள எந்த பில்டிங் என்றாலும், அவர் கைகாட்டுகிறவர்களுக்கே ஃபைல் ஓ.கே. ஆகும். `அந்த அளவுக்கு பவர்ஃபுல்லாக இருந்தவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோட்டைவிட்டது எப்படி?’ என்று மாநகராட்சி அலுவலகத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் கமிஷனர் பதவியில் இருந்தவர்களில் பிரகாஷ், கார்த்திகேயன், குமாரவேல்பாண்டியன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமும் விரைவில் விசாரணை நடத்தவிருப்பதாகத் தகவல். இவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் சிலரையும் விசாரிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கோவையிலுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறும்போது, ``கோவை டு சென்னை வரை கோலோச்சிய உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் சத்தமில்லாமல் வேலுமணி தரப்பினருக்கு பல வேலைகளை முடித்துக்கொடுத்திருக்கிறார். கடந்த சட்டமன்ற நேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளின் முக்கிய பாயின்ட்டுகளில் கொங்கு மண்டலத்திலிருந்து வாக்காளர்களுக்குக் கொடுக்கவும், தேர்தல் செலவு செய்யவும் சட்டவிரோதமான முறையில் பணம் கொண்டுபோய் பதுக்கிவைத்துள்ளனர். இவர்களின் ஆபரேஷன் சக்சஸ் ஆனதால்தான், கோவை மாவட்டத்தில் 10 சீட்டுகளிலும் அ.தி.மு.கழகம் ஜெயித்தது. இதற்குக் காரணமானவர்கள் கோவையைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள். அவர்களைப் பற்றித்தான் கடந்த சில நாள்களாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகமான தகவல்கள் குவிந்துவருகன்றனவாம். தேர்தலுக்கு முன்பு, இந்த இருவருக்கும் நவீன சொகுசு கார்கள் பரிசாகத் தரப்பட்டதாம். இந்த இருவரின் குடும்பத்து உறுப்பினர்களும்கூட ஆளுங்கட்சிப் புள்ளிகளுடன் நெருக்கமாக இருந்தார்களாம். ஒருவருக்கு பீளமேடு ஏரியாவில் இடம் வாங்கி பங்களா மற்றும் சூளூர் அருகே பண்ணை வீடு ஒன்றும் தட்சணையாக அளிக்கப்பட்டதாம். இதற்கு ரோடு போடுவது, ஷெட் அமைப்பது என்று அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் போயிருக்கிறது.

லஞ்சம்
லஞ்சம்

மற்றோர் அதிகாரி பற்றி அடுத்து பார்ப்போம். திருப்பூர், பொள்ளாச்சி, கோவையிலுள்ள சில நகைக்கடைகளில் இரண்டாவது சொன்ன அதிகாரியின் குடும்ப உறுப்பினருக்கும், வேலுமணி தரப்பினருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று ஆடிட் செய்யப்பட்டுவருகிறது. `இரண்டாவது அதிகாரியின் குடும்பத்து உறுப்பினர் யாருக்காவது நவீன ஹோட்டல் ஒன்று புதுப்பித்து தரப்பட்டதா?’ என்பதும் விசாரணையின் ஓர் அம்சம். இவை தவிர, கொங்கு மண்டலத்தில் பிரபல மூன்று கட்டுமான கம்பெனிகளில் இந்த அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களில் யாராவது முதலீடு செய்திருக்கிறார்களா என்றும் விசாரணை நடக்கிறது. இந்த இரண்டு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், உறவினர்கள் பெயர் மற்றும் விவரங்களை பத்திரப்பதிவுத்துறை, கம்பெனி நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரிகள் கொண்ட டீம் கிளறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரு அதிகாரிகளின் குட்-புக்ஸில் இருந்த மற்ற சில போலீஸ் அதிகாரிகளிடம் ரகசியத் தகவல் சேகரிப்பு படலம் நடந்துவருகிறது'' என்றார்.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல, முதல் ரெய்டுடன் முடியப்போவதில்லை. மேலும் இரண்டு கட்டங்களாக ரெய்டு நடத்துவதே லஞ்ச ஒழிப்புத்துறையினரின் திட்டம்.

ரெய்டில் சிக்காத வேலுமணி & கோ- வின் கேரளா பண்ணை வீடு! - நேரடி ரிப்போர்ட்
அடுத்த கட்டுரைக்கு