Published:Updated:

`மேடையில் கார், எல்.இ.டி திரைகள், எஸ்.பி.ஜி பாதுகாப்பு’ - மிரளவைக்கும் ரஜினியின் பிரசார ஸ்டைல்!

ரஜினிகாந்த்
News
ரஜினிகாந்த்

கொரோனா காலகட்டத்தில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் ரஜினி, மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்கான பிரசாரத் திட்டம் குறித்தும் ஆலோசித்துவருகிறார். இது குறித்து கராத்தே தியாகராஜன் நமக்கு அளித்த பேட்டி இங்கே....

'அரசியல் பிரவேசம் எப்போது...' என்ற கால் நூற்றாண்டு கேள்விக்கு விடை கொடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இனி, `அண்ணாத்த' அரசியல் பயணம் எப்படி அமையும் என்பது குறித்தான கேள்விகளோடு, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் 'அன்புத் தம்பி'யுமான கராத்தே தியாகராஜனைச் சந்தித்தேன்....

`` `மக்களிடையே எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் அரசியலுக்கு வருவேன்’ என்றார் ரஜினி. தற்போதைய சூழலில், அப்படியோர் எழுச்சி மக்களிடையே ஏற்பட்டுவிட்டதா?''

``ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார் என்றதும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், யூடியூப் சேனல்கள் என ஆயிரக்கணக்கான ஊடக நண்பர்கள் வந்துசேர்ந்துவிட்டனர். இத்தனைக்கும் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் ஊடகத்துக்குக் கொடுக்கப்படவில்லை. ஆக, மக்களிடையே எழுச்சி இல்லாமல், இவர்களெல்லாம் எப்படி வந்து சேருவார்கள் சொல்லுங்கள்?''

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
பெ.ராகேஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலிலிருந்து ஒதுங்கிய ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், உங்களைப் போன்ற நலம் விரும்பிகளும் நெருக்கடி கொடுத்தீர்கள்தானே..?''

``ரசிகர்கள், நிர்வாகிகள் அன்புத் தொல்லை கொடுக்கத்தான் செய்வார்கள். நானும்கூட `அவர் அரசியலுக்கு வர வேண்டும்; வந்தால் நன்றாக இருக்கும்' என்றுதான் விரும்பினேன். ஆனால், அவரது உடல் ஆரோக்கியம் மற்றும் இன்றைய வைரஸ் அச்சுறுத்தல்களைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, இந்த விஷயத்தில் நான் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. இனி அவர் எடுக்கிற முடிவுதான் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

அரசியலில் நடைபெறும் மாற்றங்களை ஒரு செய்தியாகத்தான் நான் அவரிடம் எடுத்துச் செல்வேனே தவிர, அதில் என்னுடைய கருத்துகளையும் சேர்த்துச் சொல்லி நான் அவரை வற்புறுத்தியது கிடையாது. அதனால்தான் இன்றளவிலும் அவருடைய அன்புத் தம்பியாக இருந்துவருகிறேன்.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``கராத்தே தியாகராஜன் மீது மட்டும் ரஜினிகாந்த் கூடுதல் அன்பு செலுத்துகிறாரா?''

``மூப்பனாருடன் நான் நெருக்கமாக இருந்தபோதுகூட, அரசியல் குறித்த தகவல்களை அவ்வப்போது நான் ரஜினிகாந்துடனும் பகிர்ந்துவந்திருக்கிறேன். இது தி.மு.க-வுக்கும் தெரியும்.

1998-ல் கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. ஹாங்காங்கிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ரஜினிகாந்த், `நாளை காலை செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்...' என்றார். மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு. எனவே நான், `நீங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடிவெடுத்துவிட்டால், அதை நாளைவரை தள்ளிப்போடாமல் இன்றே சந்தித்துவிடலாம்' என்ற என் கருத்தை எடுத்துச்சொன்னேன். அவரும் கேட்டுக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுதான், `ஒருசிலர் செய்கிற தவற்றுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தப்பு சொல்லக் கூடாது' என்றும் பேசினார்.

த.மா.கா-விலிருந்து என்னை நீக்கிய பிறகு 10,000 பேரோடு நான் காங்கிரஸில் இணைந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு எந்தவொரு கல்யாண மண்டபத்தையும் கொடுக்கக் கூடாது என்று த.மா.கா-வினர் நெருக்கடி கொடுத்த சூழ்நிலையில், ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்தார் ரஜினிகாந்த். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அரசியலுக்கு அப்பாற்பட்டும் அவருடன் எனது தொடர்பு நீடித்துக்கொண்டே இருக்கிறது.''

கராத்தே தியாகராஜன் - ரஜினிகாந்த்
கராத்தே தியாகராஜன் - ரஜினிகாந்த்

``கொரோனா தொற்று மிரட்டிவரும் இந்த நேரத்தில், ரஜினியின் பிரசாரப் பயணச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?''

``சவாலான இந்தக் காலகட்டத்தில், டிஜிட்டல் வழியிலான பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழ்நாடு முழுக்க முக்கியமான இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அண்மையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்பு விழா இதேபாணியில் நடைபெற்றது. அதைவிடவும் பிரமாண்டமான பெரிய எண்ணிக்கையில் எல்.இ.டி திரைகளை அமைத்து நாங்கள் பிரசாரம் செய்யவிருக்கிறோம். ஆனாலும் நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசும் பொதுக்கூட்ட பிரசாரங்களை ரஜினிகாந்த் விரும்புகிறார். எனவே, கூட்டங்களின்போது, ரஜினிகாந்த் தனது வாகனத்தில் நேரடியாக மேடைக்கே வந்திறங்கும்படி பிரமாண்ட மேடையைக் கட்டமைக்க முடிவுசெய்திருக்கிறோம். மேலும், கூடுதல் பாதுகாப்புக் காரணங்களுக்காக `எஸ்.பி.ஜி' எனும் `சிறப்பு பாதுகாப்புக்குழு'வையும் (Special Protection Group) அமைக்கவிருக்கிறோம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மக்களுக்கான போராட்டக் களத்தில் பங்கேற்காமல், நேரடியாகத் தேர்தல் பிரசாரத்துக்கு ரஜினி வந்திருப்பது, ஓர் அரசியல் தலைவருக்கான தகுதியாகுமா?’’

``2017-ல் நேரடி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார். அதன் பிறகு ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் தன் கருத்துகளை தெரிவித்துக்கொண்டேதான் இருக்கிறார். 1984-ல் இலங்கைப் பிரச்னையின்போது ரஜினி ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். 96-ல் த.மா.கா எனும் புதிய கட்சி தொடக்கம், ஆட்சி மாற்றம் என அத்தனை பொதுச்சேவைகளுக்கும் அவர்தான் தூண்டுதலாக இருந்தார். 98-ல் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது, `இஸ்லாமியர்கள் மீது பழி சொல்லாதீர்கள்' என்று அரணாகவே நின்றார். தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தின் மூலமாகவும் எண்ணற்ற நற்பணிகளைச் செய்துவந்திருக்கிறார்தானே...?''

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

``ரஜினிகாந்த், பா.ஜ.க ஆதரவாளர். எனவே, சிறுபான்மையினர் வாக்குகளை அவர் இழக்க நேரிடும் என்கிறார்களே..?''

``1998-ல் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது, 'ஒருசிலர் செய்கிற தவற்றுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களைத் தப்பு சொல்லக் கூடாது' என்றும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் அவர். `சி.ஏ.ஏ விவகாரத்தைச் சரிவரக் கையாளாத மத்திய பா.ஜ.க அரசு ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்' என்று கடுமையாகவே கண்டித்திருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில்கூட உலமாக்கள் சபை நிர்வாகிகளை வீட்டுக்கே அழைத்துப் பேசியிருக்கிறார்.''

``ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரஜினி எடுக்கவில்லையே..?''

``சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தை காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பிரிவினர் ஆதரிக்கிறார்கள். மற்றொரு பிரிவினர் எதிர்க்கிறார்கள். டெல்லி ஜந்தர் மந்தரில் கூட்டம் நடத்திய தி.மு.க-வே, 'காஷ்மீரிலுள்ள அரசியல் தலைவர்களைக் கைதுசெய்த நடவடிக்கை தவறு' என்றுதானே கூறியது... மற்றபடி 370 நடவடிக்கை குறித்து வாயே திறக்கவில்லையே! `370 விவகாரத்தில், மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது என்று ஸ்டாலின் கூறியதாக' திருமாவளவனே டி.வி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறாரே... இதைப் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?''

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

`` `இஸ்லாமியர்களின் பாதுகாவலரா ரஜினிகாந்த்' என்ற கேள்விக்கு, அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடுகளை உதாரணம் காட்டுவது சரிதானா?''

``இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகளே இரட்டை நிலைப்பாடு எடுக்கும்போது, ரஜினிகாந்த் தன் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாகவே கூறிவிட்டார். அப்படியென்றால், காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது என்று சொல்வீர்களா? இது ஒரு குறிப்பிட்ட பிரச்னை சம்பந்தப்பட்ட விஷயம். இதில் கருத்து சொல்வதைவைத்து, `இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து' என்று எப்படிச் சொல்வீர்கள்?

மசூதிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய உலமாக்கள் சபை நிர்வாகிகளிடமே இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்த் ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். அவரது பதிலில் உலமாக்கள் சபையினருமே திருப்தியடைந்திருக்கின்றனர். மற்றபடி உங்கள் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை!''

``பா.ஜ.க-வுக்கு ஆதரவாக, ரஜினிகாந்த்தை 'வாய்ஸ்’ கொடுக்க வைக்கும் முயற்சியாகத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி அவரைச் சந்தித்தார் என்கிறார்களே...''

``குருமூர்த்தி ஒரு பத்திரிகையின் ஆசிரியர். அந்த வகையில், ரஜினிகாந்தை அவர் அடிக்கடி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். நிருபர் ரமேஷ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டவர்களும்கூட நேரில் சந்தித்தனர். இன்னும் சிலர் நேரில் சந்தித்துள்ளனர், போனில் பேசியுள்ளனர்... அவையெல்லாம் வெளியில் தெரியவில்லை. அவ்வளவுதான்!''

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
பெ.ராகேஷ்

`` `பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறீர்களா...' என ரஜினிகாந்திடம் ரஜினி மன்ற நிர்வாகிகளே கேள்வி கேட்டதாகச் செய்திகள் வெளியாகினவே..?''

``நான் ரஜினி மன்ற நிர்வாகி இல்லை. எனவே, அது பற்றி எனக்குத் தெரியவில்லை... அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் நினைக்கவில்லை.’’