Published:Updated:

``மல்லிகார்ஜுன கார்கேவைக் கொல்வதற்குச் சதி" - காங்கிரஸ் குற்றச்சாட்டும், பாஜக-வின் விளக்கமும்!

மல்லிகார்ஜுன கார்கே

``மல்லிகார்ஜுன கார்கே விவகாரத்தில் பிரதமரும், கர்நாடக காவல்துறையும், இந்தியத் தேர்தல் ஆணையமும் ஊமையாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.'' - ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

Published:Updated:

``மல்லிகார்ஜுன கார்கேவைக் கொல்வதற்குச் சதி" - காங்கிரஸ் குற்றச்சாட்டும், பாஜக-வின் விளக்கமும்!

``மல்லிகார்ஜுன கார்கே விவகாரத்தில் பிரதமரும், கர்நாடக காவல்துறையும், இந்தியத் தேர்தல் ஆணையமும் ஊமையாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.'' - ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும், அவரின் குடும்ப உறுப்பினர்களையும் கொலைசெய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (Randeep Singh Surjewala) குற்றம்சாட்டியிருக்கிறார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் - பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங்  சுர்ஜேவாலா சில நாள்களுக்கு முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

ரன்தீப் சுர்ஜேவாலா
ரன்தீப் சுர்ஜேவாலா
ட்விட்டர்

அதில் கலபுராகி மாவட்டத்திலுள்ள சித்தப்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், ``கார்கே, அவரின் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை அழிப்பேன்’’ என்று கன்னடத்தில் கூறியிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், ``காங்கிரஸ் கட்சிக்கு, கர்நாடக மக்கள் அளிக்கும் ஆதரவால், அடுத்து வரும் கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியைச் சந்திக்கும். அதனால் தற்போது மல்லிகார்ஜுன கார்கேவையும்,அவரின் குடும்ப உறுப்பினர்களையும் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

கர்நாடகாவின் தேர்தல் விவகாரத்தில் கொலைத் திட்டம் நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமரும், கர்நாடக காவல்துறையும், இந்தியத் தேர்தல் ஆணையமும் ஊமையாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், கர்நாடக மக்கள் வாய் மூடியிருக்க மாட்டார்கள். தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று கூறினார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

அதைத் தொடர்ந்து, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, முழு விஷயத்தையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், "அந்த ஆடியோ போலியானது. என்னைக் கேவலப்படுத்துவதற்காக காங்கிரஸால் புனையப்பட்டிருக்கிறது.

தோல்வி பயத்தில் காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று தன்மீதான குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

தேஜஸ்வி சூர்யாவுடன் மணிகண்ட ரத்தோட்
தேஜஸ்வி சூர்யாவுடன் மணிகண்ட ரத்தோட்
இன்ஸ்டாகிராம்

இதற்கு முன்னர், நவம்பர் 13, 2022  அன்று சித்தாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க தலைவர் அப்போது கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரியங்க் கார்கேவைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தத் தயாராக இருப்பதாகக் கூறியது சர்ச்சையானது குறிப்பிடதக்கது.