இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையொட்டி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மக்களிடமிருந்து நிதிகளைப் பெற `பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியம் உருவாக்கப்பட்டது.
இந்த நிதியத்தின் கணக்கு வழக்குகளுக்கு மத்திய தணிக்கையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அதோடு, இந்த நிதியத்துக்கு வரும் நிதிகளின் செலவு விவரங்களைப் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. `தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்கூட செலவு விவரங்களைப் பெற முடியாது’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் திவ்ய பால் சிங் 2020-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், "`பிஎம் கேர்ஸ்’ நிதியின் கணக்குகள், செயல்பாடுகள், செலவுகள் பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிட உத்தரவிட வேண்டும்" என வழக்குத் தொடுத்திருந்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2020-ல் அந்த மனுவை நிராகரித்தது. மனுதாரர், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், "'பிஎம் கேர்ஸ்' நிதியை இந்தியத் தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கைக்காக உத்தரவிட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட அனைத்து வாதங்களும் உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படவில்லை" என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், "உயர் நீதிமன்றம் அனைத்து சிக்கல்களும் பரிசீலிக்கவில்லை என்று நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சரியாக எடுத்து வாதிட்டீர்களா ?என்பது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் சென்று உயர் நீதிமன்ற தீர்ப்பை மறு மதிப்பாய்வு செய்யுங்கள்.

உயர் நீதிமன்ற உத்தரவு எங்களுக்குக் கிடைக்கப்படட்டும்" என 'பிஎம் கேர்ஸ்' நிதியின் கணக்குகள், செயல்பாடு மற்றும் செலவுகள் பற்றிய விவரங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.