Published:Updated:

கோவை: `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க எப்படி நடத்தியது என தமிழக மக்களுக்குத் தெரியும்!’ - பிரதமர் மோடி தாக்கு

கோவையில் மோடி, எல்.முருகன்
Live Update
கோவையில் மோடி, எல்.முருகன்

ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவிலும், பா.ஜ.க பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ள பிரதமர் மோடி கோவை வந்திருக்கிறார். இது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

25 Feb 2021 6 PM

ஜெயலலிதாவை தி.மு.க எப்படி நடத்தியது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் அறியும்!

பிரதமர் மோடி``வளர்ச்சிக்கு எதிரானவர்களை மக்கள் ஒதுக்கிவைக்க வேண்டும். கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதாரவிலை இரண்டு முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் வீடுகள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 11 கோடி விவசாயிகள் பிரதமரின் விவசாய நிதி உதவித் திட்டத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்மொழி உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த மொழி. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எண்ணிலடங்கா மாணவர்கள் பயன் அடைவார்கள்” என்றார்.

கோவை: `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க எப்படி நடத்தியது என தமிழக மக்களுக்குத் தெரியும்!’ - பிரதமர் மோடி தாக்கு

தொடர்ந்து, ``நம் தேசம் முற்றிலும் வேறுபட்டு இரு அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒன்று, ஊழலுடன் கூடிய ஆட்சி. இன்னொன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகளுமே முற்றிலும் வேறுபட்ட அரசியல் பார்வைகொண்டவை. எதிர்க்கட்சிகளுக்கு என்ன வேண்டும்? தங்களின் சுயலாபம் ஒன்றுதான் அவர்களின் குறிக்கோள். அவர்களின் சட்டைப்பையை நிரப்பிக்கொள்ளத்தான் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். தி.மு.க-வும் காங்கிரஸும் நடத்தும் கூட்டங்களிலெல்லாம் ஊழலுக்கான திட்டங்கள் போடும் கூட்டம்தான். அவர்களின் தலைவர்களெல்லாம் எப்படிக் கொள்ளையடிப்பது என்பது பற்றி மூளையைக் கசக்கி, யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோடி
மோடி

ஜெயலலிதாவை தி.மு.க எப்படி நடத்தியது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் அறியும். அதை நான் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க ஆட்சியில் நடந்த நீண்ட மின்வெட்டை மறக்க முயுமா? தி.மு.க ஒவ்வொரு பகுதியிலும் சமூக விரோத கும்பலை வைத்திருக்கிறது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகப் பெண்கள்தான்” என்றார் மோடி

25 Feb 2021 5 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளிப் பூங்காக்கள்!

மோடி, ``ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு, குறு திட்டங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றன. பெரிய முதலீடுகளை ஈர்க்க ஜவுளிப் பூங்கா திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வலிமையான ஜவுளித்துறையைக் கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறது மத்திய அரசு. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஏழு ஜவுளிப் பூங்காக்கள் வரும் என நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

25 Feb 2021 5 PM

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்!

மோடி
மோடி
File Photo

கூட்டத்தில் பேசிய மோடி, ``பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு இங்கு உரையாற்ற வந்திருக்கிறேன். 25,000 சிறு, குறு நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ளன” என்றார்.

25 Feb 2021 5 PM

`தமிழகம் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும்!’

மோடி
மோடி
File Photo

கோவையில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அவருக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. `வணக்கம் தமிழ்நாடு... வணக்கம் கோயம்புத்தூர். சிறந்த சிந்தனையாளர்களை, விஞ்ஞானிகளை உருவாக்கியது கொங்கு மண்’ எனக் கூறி உரையைத் தொடங்கினார் மோடி. தமிழகம் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும் பேசினார். மேலும், ``வெற்றிவேல்... வீரவேல்...’’ எனவும் முழங்கினார்.

மோடியின் உரையை பேராசிரியர் சீனிவாசன் மொழி பெயர்க்கிறார்.

25 Feb 2021 5 PM

திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி!

மோடி
மோடி
File Photo

அரசு விழாவில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சைத் தொடங்கினார்.

``உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசிய மோடி, `பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்துவைத்ததில் பெருமை அடைகிறேன். இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும்’ என்றார்.

25 Feb 2021 4 PM

`அம்மாவின் சாயலை மோடியில் பார்க்கின்றனர் தமிழகப் பெண்கள்!’

கொடீசியா
கொடீசியா

கோவையில் அரசு விழாவில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் மோடி, அதில் தற்போது உரையாற்றிவருகிறார். மற்றொருபுறம், பா.ஜ.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் தற்போது பா.ஜ.க நிர்வாகிகள் உரையாற்றிவருகிறார்கள். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், `அம்மாவின் சாயலை மோடியில் பார்க்கின்றனர் தமிழகப் பெண்கள்’ என்றார். பிரதமர் மோடி அரசு விழாவை முடித்துவிட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார்.

25 Feb 2021 4 PM

கோவை பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆருக்கு கட்அவுட் வைக்கப்பட்டிருக்கிறது!

கட்அவுட்
கட்அவுட்
25 Feb 2021 4 PM

பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார் மோடி!

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் திருப்பூரில் 2,528 வீடுகளையும், திருச்சி மற்றும் மதுரையில் தலா 1,088 வீடுகளையும் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.

ஈரோடு கீழ் பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

8,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்களையும், தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரியமின் உற்பத்தி நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஒன்பது ஸ்மார்ட் சிட்டிகளில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

25 Feb 2021 4 PM

பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி!

விழா மேடையில் பிரதமர்  மோடி, முதல்வர் பழனிசாமி
விழா மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி

அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ``பிரதமர் மோடியின் சென்னைப் பயணம் அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்தது. எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர். கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்தார்.

25 Feb 2021 4 PM

விழா மேடையில் மோடி!

மோடி
மோடி

கோவை வந்த பிரதமர் மோடி முதலில் அரசு விழாவில் கலந்துகொண்டார். விழா மேடைக்கு வந்த அவர், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசை முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்றனர்.

25 Feb 2021 3 PM

கோவையில் பிரதமர் மோடி!

தமிழகத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்திருக்கிறார். இதற்காக காலை 7:45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து புறப்பட்ட மோடி, காலை 10:25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். புதுச்சேரி நிகழ்வுகளை முடித்துவிட்டு அங்கிருந்து சென்னை திரும்பி, பின்னர் விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

கோவை
கோவை

கோவை கொடிசியா அரங்கில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்வார். தொடர்ந்து மாலை, கொடிசியா அரங்குக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதன் காரணமாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க சார்பில், மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.