Published:Updated:

எதிர்க்கட்சியாக `கோ பேக் மோடி’... ஆளுங்கட்சியாக `ப்ளீஸ் கம்’ - பிரதமர் வருகையும் திமுக திட்டமும்!

ஸ்டாலின் - மோடி
News
ஸ்டாலின் - மோடி

எதிர்க்கட்சியாக இருந்தபோது `கோ பேக் மோடி’ என டிரெண்ட் செய்த தி.மு.க., தற்போது அதற்கு நேர் எதிரான கருத்துகளைப் பேசிவருவது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கம் என்ன?

மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள பதினோரு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைக்க ஜனவரி 12-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் மேடையில் இருப்பார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு தீவிரமாகச் செய்துவருகிறது. கடந்த காலங்களில் பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் `கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கைச் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்த தி.மு.க இப்போது பிரதமர் மோடியை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

``தமிழ்நாட்டில் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைப்பதற்காக நாங்கள்தான் பிரதமர் மோடியை அழைத்திருக்கிறோம். எங்கள் அழைப்பின் அடிப்படையில் தமிழ்நாடு வரும் அவருக்கு நாங்கள் எப்படிக் கறுப்புக்கொடி காட்ட முடியும்? அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவாதான் எதிரி. அ.தி.மு.க ஆட்சியின்போது பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதால் அப்போது எதிர்ப்பு தெரிவித்தோம், இப்போதும் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்திருக்கிறோம், அவர் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அந்த நம்பிக்கையில் இருக்கிறோம். மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் அ.தி.மு.க-வினர் தலையாட்டினார்கள். அப்படி நாங்கள் இல்லை. நாங்கள் யாருடைய காலிலும் விழவில்லை. தி.மு.க தன்மானத்தோடு நடந்துகொள்கிறது” எனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எதிர்க்கட்சியாக இருந்தபோது `கோ பேக் மோடி’ என டிரெண்ட் செய்த தி.மு.க., தற்போது அதற்கு நேர் எதிரான கருத்துகளைப் பேசிவருவது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கம் என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தி.மு.க-வின் தற்போதைய நிலைப்பாடு குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது `கோ பேக் மோடி’ என்று சொன்னவர்கள் இன்றைக்கு `ப்ளீஸ் கம்’ எனச் சொல்கிறார்கள். இது தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. இவர்கள் `கோ பேக்’ எனச் சொன்னபோதும் இப்போது `ப்ளீஸ் கம்’ எனச் சொல்லும்போதும் பிரதமராக இருப்பவர் மோடிதான். பாதுகாப்புத்துறை சார்ந்த மிகப்பெரிய கண்காட்சி நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு வந்தபோதுதான் இவர்கள் `கோ பேக் மோடி’ என்று சொன்னார்கள். பிரதமர் மோடி என்றைக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. ஆனால், மொழி அரசியலையும், மாநில அரசியலையும் எப்படியெல்லாம் தவறாக இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சின் மூலம் அறிந்துகொள்ளலாம். தமிழ் மக்களுக்குப் பிரதமர் மோடி நல்லது செய்கிறாரா இல்லையா என்பதை தி.மு.க-வினர் சான்றளிக்கவேண்டிய தேவையில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுடன் கைகோத்துக்கொள்வதும், அதிகாரத்தில் இல்லாதவர்களை வசை பாடுவதும் தி.மு.க-வுக்குக் கைவந்த கலை. ஆனாலும், இப்போதாவது இவர்களுக்கு நல்ல சிந்தனை வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்துத்துவா என்றால் என்ன என தி.மு.க-வினர் கற்றுக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் சொல்லித்தரத் தயாராக இருக்கிறோம். தமிழகத்தைத் தாங்கள் மட்டுமே காத்துக்கொண்டிருப்பதாகவும், தமிழர்களுக்குத் தாங்கள்தான் துணை என்பதாகவும் தி.மு.க-வினர் கட்டமைக்க முயல்கிறார்கள். இந்த மலிவான அரசியலைத்தான் தி.மு.க காலங்காலமாகச் செய்துவருகிறது. எது எப்படியோ பிரதமர் மோடி குறித்து இப்போதாவது இவர்களுக்குத் தெளிவு வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது” என விளக்கமளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க-வின் விமர்சனம் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசனிடம் பேசினோம். ``தி.மு.க இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைத்திருக்கும்போது அதற்கு மாறாக நாம் செயல்பட முடியாது. ஒன்றிய அரசிடம் நமக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறும் அதேநேரம், அவர்களுக்கு உரிய மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்ற அரசியல் நாகரிகத்தோடுதான் தி.மு.க எப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. சட்டத்தின்படி ஆட்சி நடத்தும் தி.மு.க., அரசு சார்பாக நடக்கும், அரசு நடத்தும் விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அநாகரிகச் அரசியலை ஒருபோதும் செய்யாது. காரணமில்லாமல் மோடியை எதிர்க்கவேண்டிய தேவையும் தி.மு.க-வுக்கு இல்லை. இந்துத்துவா, வலதுசாரி கருத்துகளை ஏற்கும் கட்சி தி.மு.க இல்லை. சமூகநீதிக்கு எதிராக, மக்களுக்கு எதிராகக் கருத்து உருவாகும்போது அதை எதிர்த்து முதல் குரல் தி.மு.க-வினரிடமிருந்துதான் எழும்.

தமிழ் கா.அமுதரசன் - திமுக
தமிழ் கா.அமுதரசன் - திமுக

அரசு சார்ந்த நிகழ்ச்சிக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது அவரை வரவேற்கவேண்டிய கடமை தி.மு.க-வுக்கு இருக்கிறது. இதைத் தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாடு என்று சொல்பவர்களுக்கு தி.மு.க-வைப் பற்றி மட்டுமல்ல, அடிப்படை அரசியல் புரிதலே இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.