Published:Updated:

`உலகின் மருந்தகமாகத் திகழும் இந்தியா!’- அணி சேரா இயக்க மாநாட்டில் முதல்முறையாக மோடி #NAM

மோடி
மோடி

``உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும்போது, சிலர் பொய்யான தகவல்களையும் தீவிரவாதங்களையும் பரப்பி, சமூகங்களைப் பிரிப்பதில் கவனமாக இருக்கிறார்கள்” என்று யாரையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார் மோடி.

உலகம் முழுவதும் கொரோனா தொடர்பான பேச்சுகள்தான். ஒருபக்கம் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகள் பல கட்டங்களாக நடைபெற்றுவருகின்றன. கொரோனா வளரும் நாடுகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. லாக்டெளன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். எனினும், கொரோனாவை அழிக்க மருந்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா விஷயத்தில் உலக நாடுகளின் கூட்டு முயற்சி என்பது மிக முக்கியம். உலக சுகாதார அமைப்பு, தொடர்ந்து இதை வலியுறுத்திவருகிறது. குறிப்பாக சீனா, அமெரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாம் வெல்ல வேண்டும் என்று கூறிவருகிறது.

இந்த நிலையில், நேற்று வீடியோ கான்ஃபரன்ஸில் நடைபெற்ற அணி சேரா இயக்க நாடுகளின் (Non-Aligned Movement (NAM)) கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அணி சேரா இயக்கம் 1961 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்காலகட்டத்தில் பனிப்போரில் ஈடுபட்டிருந்த அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் உள்ள வளரும் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், தற்போது ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் என 120 நாடுகள் இருக்கின்றன. ஐ.நா-வுக்கு அடுத்தபடியாக பெரிய அமைப்பாகவும் இது உள்ளது.

`உலகின் மருந்தகமாகத் திகழும் இந்தியா!’- அணி சேரா இயக்க மாநாட்டில் முதல்முறையாக மோடி #NAM

இந்த அமைப்பு தொடங்கப்பட்டதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருந்தாலும், சமீபகாலமாக, இந்த அமைப்பில் இந்தியா தனது பங்களிப்பை குறைத்துவிட்டது. இதற்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பேசப்படுகிறது. எனினும், அணிசேரா இயக்கத்தில் இருக்கும் நாடுகளுடன் இந்தியா தனிப்பட்ட முறையில் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கிறது. அரபு நாடுகள், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுடன் நல்லுறைவைப் பேணிவருகிறது. இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, 2016 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில், இரண்டு முறை அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அதில் இரண்டிலும் மோடி பங்கேற்கவில்லை. முன்னதாக, 2012 -ம் ஆண்டுக்குப் பின், இந்தியாவிலிருந்து பிரதமர் மட்டத்தில் அணி சேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

`தனிப்பட்ட பாதுகாப்பு காரணத்துக்காக ராஜினாமா..!’ -பெண் ஐஏஎஸ் அதிகாரி முடிவால் அதிர்ச்சி

எனினும், தற்போதைய கொரோனா என்னும் கொடிய வைரஸ் காரணமாக, அனைத்து நாடுகளுக்கும் இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு முறை இந்தக் கூட்டங்களைத் தவிர்த்த மோடி, இந்த முறை கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய மோடி, ``சர்வதேச அளவில் கொரோனா நமது வரம்புகளை நமக்கு உணர்த்தி யிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகான உலகமயமாக்கல் என்பது சமத்துவம், மனிதத்துவம் அடிப்படையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உலகம் மனித நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரம் மட்டுமே நமது எண்ணமாக இருக்கக் கூடாது.

மோடி
மோடி

இன்று, மனிதர்கள் கடந்த பல ஆண்டுகளில் கண்டிராத, மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். இந்த நேரத்தில், உலகளாவிய ஒற்றுமையை மேம்படுத்த அணிசேரா இயக்கம் உதவும். அணிசேரா இயக்கம் பெரும்பாலும் உலகின் தார்மீகக் குரலாக இருந்துவருகிறது. இதைத் தக்கவைத்துக்கொள்ள, அணிசேரா இயக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இந்தியா எப்போதும் உலக நாடுகளைத் தன்னுடைய குடும்பமாக நினைக்கும். நாங்கள், எங்கள் மக்களைப் போலவே உலக மக்கள் மீதும் அக்கறை கொண்டிருக்கிறோம். எங்களின் தேவைகள் போக, நாங்கள் உலகின் 123 நாடுகளுக்கு இந்த கொரோனா காலத்தில் மருந்துப் பொருள்களை அனுப்பியுள்ளோம். இதில் 59 நாடுகள் அணி சேரா இயக்க குழுமத்தில் உள்ள நாடுகள். அந்த வகையில் உலகின் மருந்தகமாக இந்தியா இருக்கிறது. மேலும், நாங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உருவாக்கும் பணியிலும் இருக்கிறோம்” என்றார்.

`உலகின் மருந்தகமாகத் திகழும் இந்தியா!’- அணி சேரா இயக்க மாநாட்டில் முதல்முறையாக மோடி #NAM

``உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் போது, சிலர் பொய்யான தகவல்களையும் தீவிரவாதங்களையும் பரப்பி, சமூகங்களைப் பிரிப்பதில் கவனமாக இருக்கிறார்கள்” என்று யாரையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார் மோடி.

அடுத்த கட்டுரைக்கு