Published:Updated:

‘நம் இலக்கு 10 ஆண்டுகள்; இந்த 5 ஆண்டுகள் அதற்கான முதல் படி!’ - பட்ஜெட் குறித்து பிரதமர்

சத்யா கோபாலன்

பா.ஜ.க-வில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை இன்று வாரணாசியில் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( Twitter/@BJP4india )

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து பா.ஜ.க-வில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

லால் பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு
லால் பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு
Twitter/@BJP4india

வாரணாசியில் இன்று தொடங்கும் இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. தன் சொந்த தொகுதியான வாரணாசிக்குச் சென்ற பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக், பா.ஜ.க-வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் மகேந்திர நாத் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் வாரணாசி விமான நிலையத்துக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையைத் திறந்து வைத்தார்.

முன்னதாக நடந்த பா.ஜ.க கூட்டத்தில், ‘ ஒவ்வொரு வாக்குச்சாவடி வரைவுக்குள்ளும் கட்சித் தொண்டர்கள் குறைந்தது ஐந்து மரங்களை நட வேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தார் மோடி. அதை நிறைவேற்றும் விதமாக வாரணாசியில் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கியும், மரக்கன்றை நட்டுவைத்தும் அந்த முறையையும் தொடங்கி வைத்தார்.

மரகன்று நடும் பிரதமர்
மரகன்று நடும் பிரதமர்
Twitter/@BJP4india

இதைத்தொடர்ந்து பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார். அதற்காக 8980808080 என்ற உதவி எண்ணையும் அறிமுகப்படுத்தினார் பிரதமர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, “வாரணாசி விமான நிலையத்துக்கு அருகில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவ சிலையைத் திறந்துவைத்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்தியப் பொருளாதாரம் விரைவில் 5 லட்சம் கோடி டாலர் இலக்கை எட்டும் எனக் கூறியிருந்தார். 5 லட்சம் கோடி பொருளாதாரம் என்றால் என்ன என்பதை பா.ஜ.க தொண்டர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள்தான் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

நம்மால் இதைச் செய்ய முடியாது என நினைப்பவர்களின் எண்ணத்தை உடைத்து நாம் செய்து காட்ட வேண்டும்.
பிரதமர் மோடி

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த புதிய இந்தியா மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிறைய மக்கள் பயன்பெறுவர். நம்முடைய பட்ஜெட் அடுத்த 10 ஆண்டுகள் இலக்கை கொண்டுள்ளது. தற்போது நமக்குள்ள இந்த ஐந்து ஆண்டு அதற்கான முதல் படி மட்டுமே. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் செல்லும்போது அவர்கள் இல்லாமல் இந்தியா பிழைக்க முடியாது என நினைத்தனர். ஆனால், சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் ஒருமைப்பாட்டை அப்படியே வைத்திருக்கத் தீர்மானித்து அதைச் செய்து முடித்தார். அதேபோல் நாமும் ஏதேனும் செய்யத் தீர்மானித்தால் அது நிச்சயம் சாத்தியமாகும். முழு மனதுடன் செய்ய நினைத்தால் மட்டுமே ஒருவர் தன் இலக்குகளை அடைய முடியும்” எனப் பேசியுள்ளார்.