Published:Updated:

`இந்தியர்களுக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி’ - கர்த்தார்பூர் பாதையைத் திறந்து வைத்த பிரதமர் மோடி

சீக்கியர்களின் வழிப்பாட்டிற்காக கர்த்தார்பூர் வழித்தடத்தை இந்தியப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

மோடி
மோடி

சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவ், தனது இறுதிக் காலத்தை இப்போது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாகக் கூறப்படுகிறது. அவரது நினைவாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வார் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மோடி
மோடி

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் சண்டையில் அங்கு உள்ள குருத்வாருக்கு, இந்திய சீக்கியர்கள் செல்வதில் பல அண்டுகளாகச் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இந்தியர்கள் கர்த்தார்பூர் செல்ல இரு நாடுகளுக்கு இடையே வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்குச் செல்ல வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 12-ம் தேதி குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். முதல் நாளான இன்று, இந்தப் பயணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் எல்லை தாண்டி யாத்திரை மேற்கொள்கின்றனர். அதேபோன்று பாகிஸ்தானில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இந்த வழித்தடத்தைத் தொடங்கிவைத்து இந்திய யாத்திரிகர்களை வரவேற்றார்.

மோடி
மோடி

இன்று நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “ இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றிகள். குருநானக்கின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு கர்த்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறி குருநானக்கின் சிறப்புகளைப் பற்றிப் பேசியுள்ளார்.