கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பா.ஜ.க-வும், காங்கிரஸும் தங்களின் நட்சத்திரப் பேச்சாளர்களைக்கொண்டு ஒருவரையொருவர் கடுமையாகச் சாடிவருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடியை விஷப் பாம்பு எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

கலபுர்கியில் நடந்த பேரணியில் மோடியைச் சாடிய கார்கே, ``மோடி ஒரு விஷப் பாம்பைப் போன்றவர். நீங்கள் ஒருவேளை அதில் விஷம் இருக்கிறது அல்லது இல்லையென்றுகூட நினைக்கலாம். ஆனால், நீங்கள் அதைத் தொட்டுப் பார்த்தால் இறந்துவிடுவீர்கள்" என்று கூறினார்.
பின்னர் இதை மாற்றிக்கொண்ட கார்கே, ``நான் மோடியைக் குறிப்பிடவில்லை. பா.ஜ.க-வின் சித்தாந்தம் பாம்பைப் போன்றது என்று சொன்னேன். ஒருபோதும் நான் இதை மோடிக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் கூறவில்லை. அவர்களின் சித்தாந்தம் பாம்பைப் போன்றது. நீங்கள் அதைத் தொட முயன்றால், உங்களுக்கு மரணம் நிச்சயம்" என்று கூறினார்.

கார்கேவின் இத்தகைய கருத்து பா.ஜ.க வட்டத்தில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிர்வினையாற்றிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ``கார்கேவின் எண்ணத்தில் விஷம் இருக்கிறது. அரசியல்ரீதியாகப் போட்டிபோட முடியாத விரக்தியில் அவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் வருகின்றன. தங்களின் கப்பல் மூழ்குவதைக் கண்ணெதிரே காண்கின்றனர். மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
இது பெரும் சர்ச்சையாக வெடிக்கவே, தான் கூறியது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாக கார்கே தெரிவித்திருக்கிறார்.