``நபிகள் நாயகம் தொடர்பாக முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளரின் சர்ச்சைக் கருத்து விவகாரத்தில், மத்திய அரசு காது கேளாததுபோல் இருந்தது வருத்தமளிக்கிறது’’ என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களான நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை பா.ஜ.க கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் அவர்களைக் கைதுசெய்யக் கோரி, டெல்லி ஜும்மா மசூதி, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்துவிட்டு போராட்டம் நடத்தினர். இதில் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்தன. இதற்கு நடவடிக்கை எடுக்கும்விதமாகக் கலவரக்காரர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் மற்றும் கலவரம் தொடர்பாகத் தனியார் ஊடகத்திடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், ``பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் இத்தகைய செயல்களுக்குப் பிறகு, பிரதமர் இதில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள், எழுத்தாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் எனப் பலரும் இத்தகைய இஸ்லாமிய வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அரசை எச்சரித்தபோதும், அரசு காது கேளாததுபோல் இருந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக 16 இஸ்லாமிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற இஸ்லாமிய வெறுப்புகளை நிறுத்த, இந்திய இஸ்லாமியர்கள் வெளிநாடுகளைத்தான் எதிர்பார்க்க வேண்டுமா... அதுமட்டுமல்லாமல் மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதில் இந்த அரசு நேர்மையற்றதாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது" என கூறினார்.
நுபுர் ஷர்மாவின் இந்தச் சர்ச்சையில், தீவிரவாத அமைப்பான அல்கொய்தா பாஜக தலைவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம் என அறிக்கை வெளியிட்டு எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
