Published:Updated:

``ஒரு குடும்பத்தால் அந்த குடும்பத்துக்காகவே நடத்தப்படும் கட்சி!" - காங்கிரஸைச் சாடிய மோடி

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

இந்தியாவில் மக்களாட்சிக்குக் குந்தகம் விளைவிக்கும்விதமாக, ஒரே குடும்பம் ஒரு கட்சியைப் பல தலைமுறைகளாக நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 71-வது அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டப வளாகத்தில் அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க என மொத்தம் 14 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வெளியில் அணிவகுத்து நின்று மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினார்கள். எதிர்க்கட்சியினர் வெளியில் கோஷமிட்டுக்கொண்டிருக்க, மைய மண்டபத்தில் அரசியலமைப்பு விழா கொண்டாடப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்திய மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகள். அரசியலமைப்பு சட்டம்தான் வேறுபாடுகள் நிறைந்த நம் நாட்டை ஒன்றிணைக்கிறது. இந்த அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தியாவில் மாநிலங்களை ஒன்றிணைத்திருக்கிறது. நம் நாட்டின் மீது ஒப்பற்ற பற்றுகொண்ட தேசத் தலைவர்கள், தங்களின் கடின உழைப்பாலும், கூர் மதியாலும் இந்தச் சட்டத்தை உருவாக்கி, நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாம் இந்த தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

 மோடி - ராகுல்
மோடி - ராகுல்

அதேபோல, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காகத் தீவிரமாகப் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியையும் இந்த நேரத்தில் நாம் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். இங்கு, ஒரு குடும்பத்தால், அந்த குடும்பத்துக்காக மட்டுமே ஒரு கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்களாட்சிக்குக் குந்தகம் விளைவிக்கும்விதமாக, ஒரே குடும்பம் அந்தக் கட்சியைப் பல தலைமுறைகளாக நடத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் அந்தக் கட்சி குறித்தும், குடும்பம் குறித்தும் நான் கூடுதலாகச் சொல்ல வேண்டுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க விரும்புவோருக்கு குடும்பவழிக் கட்சிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இது ஒரு கவலைக்குரிய விஷயம்.

இந்தக் கட்சிகளால் இந்தியா நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நான் அரசியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வரக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் ஒரு கட்சியை நடத்துவது என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றுதான் கூறுகிறேன்" என்று காங்கிரஸை மறைமுகமாக மோடி கடுமையாகச் சாடினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz