Published:Updated:

`உங்கள் ஆதரவே... என் உத்வேகம்!’ - ஆக்ரா மெட்ரோ விழாவில் பிரதமர் மோடி

மோடி
மோடி

``ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் ஏழைகளும் நடுத்தர மக்களும் எங்கள் முயற்சிகளை ஆதரித்தனர். உங்கள் ஆதரவே என் உத்வேகம்’’ - பிரதமர் மோடி.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மெட்ரோ ரயில் திட்டம் இருவழித் தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. ஆக்ரா மக்களுக்கும், ஆண்டுதோறும் அங்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்படவிருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும், ரூபாய் 8,379.62 கோடி மதிப்பிலான இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும். இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணியை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆக்ராவின் 15-வது பட்டாலியன் பிஏசி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தநிகழ்வில், ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில், ``மத்திய பா.ஜ.க அரசு புதிய திட்டங்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், திட்டங்களைச் சரியான நேரத்தில் முடிக்க போதுமான நிதியையும் ஏற்பாடு செய்திருக்கிறது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவே தவிர, அதற்கான நிதி ஏற்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. எனவேதான், திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைவடையாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. புதிய திட்டங்கள் தொடங்குவதிலும், அவற்றுக்கான நிதியை ஏற்பாடு செய்வதிலும் எனது அரசு அதிக கவனம் செலுத்திவருகிறது" என்றார்.

ஆக்ராவின் கலாசாரம் மற்றும் வரலாறு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, ``பணக்கார வரலாறும் கலாசாரமுமகொண்ட இந்த நகரத்தின் ஸ்மார்ட் சிட்டி வசதிகளை மேம்படுத்துவதற்காக, சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆக்ரா மெட்ரோ திட்டம் ஆக்ராவில் ஸ்மார்ட் சிட்டி வசதிகளை நிறுவுவது தொடர்பான பணியை வலுப்படுத்தும்" என்று கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், ``கடந்த ஆறு ஆண்டுகளில், மெட்ரோ கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம் மற்றும் அளவு, இந்த அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. 2014-ம் ஆண்டு நம் நாட்டில் 225 கி.மீ மெட்ரோ பாதை பயன்பாட்டில் இருந்துவந்தது. தற்போது, ஆறு ஆண்டுகளில், 650 கி.மீ ரயில் பாதை செயல்பாட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1,000 கி.மீ தூரம் ரயில் பாதையைக் கொண்டு செல்லும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. 27 நகரங்களில், மெட்ரோ கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன அல்லது வெவ்வேறு கட்டங்களில் நடந்துவருகின்றன" என்றும் மோடி குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் (GHMC) 150 இடங்களில் 48 இடங்களை பா.ஜ.க வென்றதைச் சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவின் சகோதரிகள், மகள்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நம்பிக்கை சமீபகாலங்களில் நடந்த ஒவ்வொரு தேர்தலின் முடிவுகளிலும் தென்படுகிறது. ஹைதராபாத் தேர்தலில் ஏழைகளும் நடுத்தர மக்களும் எங்கள் முயற்சிகளை ஆதரித்தனர். உங்கள் ஆதரவே என் உத்வேகம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு