Published:Updated:

`நெருங்கும் அயோத்தி தீர்ப்பு!’ - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பேசியது என்ன?

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மத குருக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. விரைவில் தீர்ப்பு நாள் அறிவிக்கப்படும். வரும் 10 -தேதிக்குப் பின் தீர்ப்பு எப்போது வேண்டுமென்றாலும் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

``நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள்” போன்ற ஃபார்வர்டு தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவின. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்த கமிஷனர், `காவல்துறைக்கும் இந்த மெசேஜுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது யாரோ தயாரித்துப் பரப்பி வரும் செய்தி. இதுபோல நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. மக்கள் யாரும் அதையெல்லாம் நம்பவேண்டாம்’ என்றார்.

இந்நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மத குருக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள், பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நாட்டில் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றும் வகையில் செயலாற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. சுயலாபத்துக்காக சிலர் சதி செயலில் ஈடுபடலாம் என்பதால் இந்த விவகாரத்தைக் கவனமாகக் கையாளவேண்டும் என விவாதிக்கப்பட்டது.

அயோத்தி
அயோத்தி

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள், இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதாகவும் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் சட்ட ரீதியாக மட்டுமே எங்களின் போராட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்களிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளியாகும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்கக்கூடாது. அமைதியை நிலைநாட்டும் வகையில்தான் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.

மோடி
மோடி

அயோத்தி விவகாரம் தவிர்த்து நாட்டின் தூய்மை குறித்தும் பேசியுள்ளார் மோடி. மத்திய அரசாங்கத்திடமிருந்து தூய்மைக்காக பல திட்டங்களை முன்னெடுத்தபோதும் இன்னும் நாட்டில் பல இடங்களில் தூய்மையில் முன்னேற்றம் காண முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அமைச்சர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறார் மோடி.