Published:Updated:

`சமூகப் பரவலைத் தடுக்க புதிய திட்டம்?!' - நாட்டு மக்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி #Corona

பார்சிலோனா கால்பந்து மைதானம்
பார்சிலோனா கால்பந்து மைதானம்

இத்தாலி, பிரான்ஸ் , ஸ்பெயின் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிர்ப்பலிகள் அதிகம் ஏற்பட கொரோனாவின் சமூகப் பரவல்தான் முக்கியக் காரணம்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடே அச்சத்தில் உள்ளது. இந்தியாவில், தற்போது கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. சமூகப் பரவல் என்ற அடுத்த நிலைக்கு இந்தியா எட்டவில்லை. இது, சற்று ஆறுதலான விஷயம். கொரோனாவின் சமூகப் பரவலைத் தடுக்க , மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக முயன்றுவருகின்றன. இத்தாலி, பிரான்ஸ் , ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிர்ப்பலிகள் அதிகம் ஏற்பட கொரோனாவின் சமூகப் பரவல்தான் முக்கியக் காரணம். குறிப்பாக, கால்பந்துப் போட்டிகள்.

இந்தியாவில் மக்கள் கூட்டம்
இந்தியாவில் மக்கள் கூட்டம்

வார இறுதி நாள்களில், இந்த நாடுகளில் தொடர்ச்சியாக லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறும். போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் கூடுவார்கள். இதனால், ஏராளமான கால்பந்து வீரர்களையும் இந்த நோய் தொற்றியுள்ளது. யுவான்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோகூட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு, கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் இந்த நாடுகளில் அதிகம். மக்கள் ஒரே இடத்தில் அதிகமாகக் கூடியதன் விளைவாக, ஐரோப்பிய நாடுகள் கொரோனா-வின் கோரப் பிடியில் சிக்கியுள்ளன.

சுதாரித்துக்கொண்ட இந்தியா, ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம்கூட ரசிகர்கள் இல்லாமல் வெற்று மைதானத்தில்தான் நடந்தது. தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணியளவில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அப்போது, பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

`போர்க்களத்தின் நடுவே நடந்து செல்வதைப் போல உள்ளது!’ - கொரோனாவால் கதறும் இத்தாலி மருத்துவர்கள்

அதாவது , நாடு முழுவதும் 144 தடை உத்தரவு சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.`முன்கூட்டியே, தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தலாம்' என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியாளர்களிடத்திலிருந்து அறிவிப்பு வெளியாகலாம்.

144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று காவல்துறை தரப்பில் கேட்டபோது,``மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காகவேதான் இந்த ஏற்பாடு. நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேல் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை இந்தச் சட்டம் தடுக்கிறது. மீறினால் கைது செய்யப்படலாம். மற்றபடி கடைகள் திறக்கவோ போக்குவரத்துக்கோ எந்தத் தடையும் இருக்காது'' என்று தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து விளக்கம் பெற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இதய அமுதனைத் தொடர்புகொண்டோம்.

இதய அமுதன் வழக்கறிஞர்
இதய அமுதன் வழக்கறிஞர்

``சிஆர்பிசி சட்டத்தின்படி, 144 என்பது நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பொது இடத்தில் கூடுவதைத் தடைசெய்வது. இது, மெடிக்கல் எமர்ஜென்ஸி முறையில் இப்போது அறிவிக்கப்பட்டால், பொது இடத்தில் மக்கள் கூடுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியாளருக்கு அதிகாரம் உண்டு. தேவை ஏற்பட்டால், பொதுமக்கள் அதிகம் பயணப்படாமல் இருக்க, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பொதுப் போக்குவரத்தையும் தடை செய்யலாம்” என்றார்.

டெல்லியில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது இடங்களில் பயணிப்பதை, மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு அறிக்கை மட்டுமே விட்டார். 144 தடைச்சட்டம் இதுவரை அங்கு இல்லை. ராஜஸ்தானில் 144 தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் கூடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு