ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, கடந்த 11-ம் தேதி அ.தி.மு.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அதில், பொன்விழா காணும் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். அந்த நேரத்தில், ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வர முயன்ற ஓ.பி.எஸ்-ஸை, அங்கிருந்த இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக, அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இரு தரப்பும் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கினார். அலுவலகத்தின் சாவி கையில் கிடைத்தபோதும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆனபோதும், நிம்மதியாக உட்காரக்கூட முடியாமல் தன்னைச் சுற்றியிருக்கும் ஆதரவாளர்களுக்கு வருமான வரித்துறையின் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் எடப்பாடி திணறிவருவதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைச் சமாளிக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து டெல்லிக்குப் பறந்தார் எடப்பாடி. ஆனால், எதிர்பார்த்தபடி, பிரதமர் மோடியிடம் தனியாகப் பேச முடியவில்லை. அவர் கைகாட்டிய அமித் ஷா-வையும் சந்திக்க முடியாமல், பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பினார் எடப்பாடி. இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஸ்டார் ஹோட்டல் வளாகத்தில் இன்று (28-ம் தேதி) தொடங்க உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்கவிழா இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 29-ம் தேதி நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வரும் பிரதமர் மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டுவருகின்றனர்.
இது குறித்து எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் கூடாரத்தில் விசாரித்தபோது, " டெல்லியில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவுக்கு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைக் காரணமாக வைத்து கட்சி மற்றும் ஐ.டி ரெய்டு குறித்து டெல்லி தலைமையைச் சந்திக்க எடப்பாடி முடிவுசெய்தார். அதன்படி, விழாவில் பிரதமரை அவர் சந்தித்தபோது, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்காக எந்த வாழ்த்தும் கிடைக்கவில்லை. அதேபோல, தன்னைச் சுற்றி நடக்கும் குழப்பான சூழ்நிலை குறித்துப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியாகத் தேர்வான முர்மு-வின் பதிவியேற்பு விழா உள்ளிட்ட பல வேலைகள் பிரதமர் மற்றும் அமித் ஷாவுக்கு இருந்ததால் அவர்களுடன் தனியாகப் பேச முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்தார் எடப்பாடி.

ஆனால், தற்போது சென்னைக்கு வரும் பிரதமர் மோடி கொஞ்சம் ஃபிரீயாக இருப்பார். ஒரு நாள் இரவு சென்னையில் பிரதமர் தங்கவிருக்கிறார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவரைச் சந்தித்து தனியாகப் பேச, எடப்பாடியும் பன்னீர்செல்வம் தரப்பும் தனித்தனியாக முயன்றுவருகின்றனர். ஆனால், பிரதமர் அலுவலகம் இன்னும் கிரீன் சிக்னல் எதுவும் கொடுக்கவில்லை. அதேநேரத்தில் சந்திக்க முடியாது என்று மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, கடைசி நேரத்தில்கூட சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று இருவரும் காத்திருக்கிறார்கள்" என்பது தெரியவந்தது.
அதேபோல பா.ஜ.க தரப்பில் கேட்டபோது, "பிரதமர் மோடி சர்வதேசப் போட்டியைத் தொடங்கிவைக்கவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காகவும்தான் சென்னைக்கு வருகிறார். இந்நேரத்தில் அரசு மூவ் இருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம். ஆனால், எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சந்திக்க வேண்டுமா வேண்டாமா என்பதை பிரதமர்தான் முடிவுசெய்வார். திடீரென பிரதமர் மோடி தனது பிளானை மாற்றலாம்" என்றனர்.

ஒருவேளை பிரதமர் மோடி எடப்பாடியைச் சந்தித்துவிட்டு ஓ.பி.எஸ்-ஸைச் சந்திக்காமல் சென்றுவிட்டாலும், ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்துவிட்டு எடப்பாடியைச் சந்திக்காமல் சென்றாலும், அது அ.தி.மு.க-வில் பல புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அல்லது இருவரையும் சந்தித்தாலும், சந்திக்காமல் சென்றுவிட்டாலும், அ.தி.மு.க-வில் இப்போது நடக்கும் பூசல்கள் தொடரவே செய்யும். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்..!