Published:Updated:

``மாறுவீங்களா... மாத்தட்டுமா?" நாடாளுமன்றத்துக்கு வராத பாஜக எம்.பி-க்களுக்கு மோடி வைத்த செக்!

மோடி
News
மோடி

விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது தொடங்கி 12 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், அணைப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம், நாகலாந்து துப்பாக்கிச்சூடு என எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

``குழந்தைக்குச் சொல்வதுபோல, திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது! இந்தப் பழக்கத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால், பிறகு நீங்களே மாற்றப்படுவீர்கள்" என நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வருகை தராமல் டிமிக்கி கொடுத்த பா.ஜ.க எம்.பி-க்களிடம் பொரிந்து தள்ளியிருக்கிறார் பிரதமர் மோடி.

 மோடி
மோடி

கடந்த, நவம்பர் மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர். விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, 12 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், அணைப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம், நாகலாந்து துப்பாக்கிச்சூடு என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றமே பரபரத்துக்கொண்டிருக்கிறது. இவற்றைச் சமாளிக்க முடியாமல், ஆளும் பா.ஜ.க அமைச்சரவை தள்ளாடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரின் எந்த அமர்வுக்கும் வராமல் பா.ஜ.க எம்.பி-க்கள் பலர் நழுவிவரும் போக்கு அந்தக் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே, பா.ஜ.க நாடாளுமன்ற கொறடா உட்பட உயர்மட்டத் தலைவர்கள் பலரும், பா.ஜ.க எம்.பி-க்கள் சரிவர நாடாளுமன்ற கூட்டத்துக்கு வராததை கண்டித்துப் பேசியிருக்கின்றனர். வாய்மொழி உத்தரவும் பிறப்பித்திருக்கின்றனர். ஆனால், அப்போதும் பெரும்பாலான எம்.பி-க்கள் அவற்றை காதில் வாங்காமலேயே இருந்துவந்திருக்கின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
ANI

இந்த நிலையில்தான், சொந்தக் கட்சி எம்.பி-க்களின் சொல்பேச்சு கேளா நிலைக்கு ஒரு முடிவு கட்டும்விதமாக, பா.ஜ.க தலைமை முதன்முறையாக எம்.பி-க்களுக்காக ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்தது. நேற்று முன்தினம், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடத்தப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜெய்சங்கர், பிரஹலாத் ஜோஷி, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட அனைத்து மூத்த உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

அந்தக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``அனைத்து பா.ஜ.க எம்.பி-க்களும் அவர்களின் மாவட்ட, மண்டல கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என எம்.பி-க்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், ``கட்சியின் வளர்ச்சிக்கும், தொகுதி மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களை எம்.பி-க்கள் நடத்த வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரசாரமாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், `பாஜக எம்.பி-க்களே நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வராமல் போக்குக்காட்டுவதாக' குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது பேசிய பிரதமர் மோடி, ``பா.ஜ.க எம்.பி-க்கள் கூட்டத்தொடரில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது குறித்து பிரதமர் மோடி கூட்டத்தில் பேசியபோது, ``பா.ஜ.க எம்.பி-க்கள் தயவுசெய்து நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். நான் ஏற்கெனவே பலமுறை உங்களிடம் இதை வலியுறித்திக் கூறியிருக்கிறேன். குழந்தைகளுக்குச் சொல்வதுபோல, திரும்பத் திரும்ப இப்படிச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது! கட்டாயம் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்களே மாற்றப்படுவீர்கள். சரியான நேரத்தில் இந்த மாற்றங்கள் ஏற்படும்!" எனக் கடுமையாக எச்சரித்துப் பேசியிருக்கிறார். மேலும், ``எல்லோரும் தினமும் சூர்ய நமஸ்காரம் செய்துவிட்டு இனி கூட்டத்தொடருக்கு வாருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, நாட்டு மக்களுக்கும் நல்லது" என அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.

மோடி
மோடி

மோடியின் இந்த எச்சரிக்கை, நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வராமல் தொடர் முழுக்குப் போட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.க எம்.பி-க்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. இனி அனைத்து பாஜக எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்கு விடுப்பில்லாமல் வருகை தந்து, நூறு சதவிகித அட்டெண்டன்ஸ் தருவார்கள் என இந்த முறையும் கட்சித் தலைமை நம்பிக்கையுடன் இருக்கிறது.