மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், வெறும் அறிவிப்போடு இல்லாமல் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த இந்திய விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த மாதம் நவம்பர் 26-ம் தேதியுடன் இந்தப் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதை வரவேற்று, போராடும் விவசாயிகள் அனைவரும் இனிப்பு வழங்கி கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத், ``மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து என பிரதமர் மோடி அறிப்பாகத்தான் வெளியிட்டிருக்கிறார். சட்டபூர்வமாக, எழுத்துபூர்வமாக கையெழுத்தாகி, அதை நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை எங்களின் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம். தொடர்ந்து போராட்டம் நடைபெறும்" என அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.