Published:Updated:

`தாயிடம் ஆசீர்வாதம்; மதிய உணவு!’ - மோடியின் பிறந்தநாள் ஹைலைட்ஸ்

முக்கியமான நாள்களில், தன்னுடைய அன்றாடப் பணிகளையும் தாண்டி தன் தாயாரை சந்திக்கச் சென்றுவிடுவார் பிரதமர் மோடி.

modi
modi

``நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று ராகுல் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். `திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல ஆண்டுகள் மக்கள் சேவையாற்ற வேண்டும்' என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

ட்விட்டரில் #happybirthdaynarendramodi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிவருகிறது.

blessings from mother
blessings from mother

பிரதமர் நரேந்திர மோடி, தனது 69-வது பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசிக்கும் தன் தாயை இன்று சந்தித்து ஆசி வாங்கினார். மோடியின் தாயார் ஹீராபென், 98 வயதானவர். அவர், ரைசின் கிராமத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்துவருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு, அங்கு சென்று தன் தாயிடம் ஆசீர்வாதம் வாங்கிய மோடி, அவருடன் மதிய உணவை உண்டார். இதனைத் தொடர்ந்து, அண்டை வீட்டில் இருப்பவர்களைச் சந்தித்துப் பேசினார்.

முக்கியமான நாள்களில், தன்னுடைய பிஸி ஷெட்யூலையும் கடந்து, மோடி தன் தாயாரை சந்திக்கச் சென்றுவிடுவார். இரண்டாவதுமுறையாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது, பதவியேற்பில் அவரது தாயார் கலந்துகொள்ளவில்லை. மாறாக, வீட்டில் இருந்தபடியே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பதை டி.வி-யில் பார்த்துக் கைதட்டி மகிழ்ந்தார்.

having lunch
having lunch

இதனிடையே, மோடி தனது பிறந்தாளை முன்னிட்டு தாயிடம் ஆசி வாங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.தொடர்ந்து, நர்மதா அணையைப் பார்வையிட்டார்.

2017-ம் ஆண்டு, நர்மதா அணையைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி . அந்த அணை தற்போது, அதன் முழுக் கொள்ளளவான 138.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணையின்மூலம் 131 நகர மையங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்றும், 9,633 கிராமங்களுக்கு பாசனத்துக்கு நீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இதன்மூலம் பயனடைய உள்ளன. கடந்த ஆண்டு, தனது வாரணாசி தொகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளோடு பிரதமர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.