Published:Updated:

``பிரதமர் மோடி எங்களிடம் ஆதரவு கேட்டார்" - கிறிஸ்தவ பேராயர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?!

பேராயர்களைச் சந்தித்த பிரதமர் மோடி

வளர்ச்சிக்கு மதம் தடையாக இருக்காது எனவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோவா உள்ளிட்ட பகுதிகள் மத்திய அரசையும், பா.ஜ.க-வையும் ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்ததாக, பேராயர்கள் கூறினர்.

Published:Updated:

``பிரதமர் மோடி எங்களிடம் ஆதரவு கேட்டார்" - கிறிஸ்தவ பேராயர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?!

வளர்ச்சிக்கு மதம் தடையாக இருக்காது எனவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோவா உள்ளிட்ட பகுதிகள் மத்திய அரசையும், பா.ஜ.க-வையும் ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்ததாக, பேராயர்கள் கூறினர்.

பேராயர்களைச் சந்தித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலத்துக்கு வந்தார். நேற்று முன்தினம் கொச்சியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற `யுவம் -2023’ என்ற நிகழ்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். இளைஞர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. ஆனால், பிரதமர் உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நேற்று இரவு, கொச்சி தாஜ் விவண்டா ஹோட்டலில் கிறிஸ்தவ பேராயர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். சீரோ மலபார் சபை ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க சபை கர்த்தினால் பசேலியோஸ் மார் கிலிமீஸ், ஆர்த்தோடாக்ஸ் சபையின் கர்த்தினால் மார்த்தோமா மேத்யூஸ் உள்ளிட்ட எட்டு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு குறித்து பேராயர்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கின்றனர்.

பேராயர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி
பேராயர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி

ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. வடஇந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை பிரதமர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். கிறிஸ்தவ சமூகத்தைப் பாதுகாப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். அனைத்து மதத்தினருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டியலின கிறிஸ்தவர்களின் இட ஒதுக்கீடு குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதித்தோம். கேரள மக்களுக்கு தேவையானவற்றையும், புதிய வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவருவதாக பிரதமர் தெரிவித்தார். பாரத நாடு முழுவதையும் ஒரே சீராகப் பார்ப்பதாகவும், வளர்ச்சிக்கு கேரளாவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார். போப் ஆண்டவரை இந்தியாவுக்கு அழைத்திருப்பதாக பிரதமர் கூறினார். கேரளாவின் தேவைகள் குறித்து பிரதமரிடம் பேச முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. திறந்த மனதுடன் பிரதமர் நரேந்திர மோடி எங்களிடம் உரையாடினார்" என்றார்.

பேராயர்களைச் சந்தித்த பிரதமர் மோடி
பேராயர்களைச் சந்தித்த பிரதமர் மோடி

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட யாக்கோபாயா சபையின் பேராயர் ஜோசப் மார் கிரிகோரியோஸ் கூறுகையில், "பிரதமருடனான சந்திப்பில் பொதுவான விஷயங்களில் கிறிஸ்தவர்களின் அச்சம் குறித்து பகிர்ந்துகொண்டோம். விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்னைகளையும் எடுத்துரைத்தோம். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத கேரளா போன்ற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களைத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

பிரதமர் மோடி அடிக்கடி கேரளாவுக்கு வர வேண்டும் எனவும் பேராயர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தோம். சர்ச்சுகள் சம்பந்தமான பிரச்னைகளைத் தெரிவித்தோம். அதற்குத் தீர்வு காண உதவி செய்வதாக பிரதமர் தெரிவித்தார். கேரளா மாநிலத்துக்கு வழங்கவேண்டிய எல்லா நலத்திட்டங்களும் வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

பேராயர்களிடம் உரையாடும் பிரதமர் மோடி
பேராயர்களிடம் உரையாடும் பிரதமர் மோடி

வளர்ச்சிக்கு மதம் தடையாக இருக்காது எனவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோவா உள்ளிட்ட பகுதிகள் மத்திய அரசையும். பா.ஜ.க-வையும் ஆதரிப்பதாகவும் கூறினார். எங்களின் பிரார்த்தனையும் ஆதரவும் வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அது உண்டு என நாங்கள் தெரிவித்தோம். பிரதமருடனான சந்திப்பு உற்சாகம் அளிக்கிறது. சபைத் தலைவர்கள் சொல்வதைக் கேட்டு மக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பது இல்லை. அரசு எந்த வகையில் மக்களுக்காகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே மக்கள் முடிவு செய்வார்கள். இதை நாங்கள் முன்பே தெரிவித்திருக்கிறோம். மக்களின் வேதனைகளையும், அச்சம் குறித்தும் பிரதமரிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதை நான் அரசியலாகப் பார்க்கவில்லை" என்றார்.