Published:Updated:

குஜராத்: ``ராமரின் நிலத்துக்கு வந்து, ஒருவரை `ராவணன்' என்பது சரியல்ல!" - காங்கிரஸைச் சாடிய மோடி

`குஜராத் மாநிலம் எனக்கு அளித்த பலம் காங்கிரஸை நடுங்க செய்கிறது.' - மோடி

Published:Updated:

குஜராத்: ``ராமரின் நிலத்துக்கு வந்து, ஒருவரை `ராவணன்' என்பது சரியல்ல!" - காங்கிரஸைச் சாடிய மோடி

`குஜராத் மாநிலம் எனக்கு அளித்த பலம் காங்கிரஸை நடுங்க செய்கிறது.' - மோடி

சமீபத்தில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த பேரணி ஒன்றில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ``மோடிஜி ஒரு பிரதமர். ஆனால் அவர் தன்வேலையை மறந்துவிட்டு மாநகராட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எல்லா இடங்களிலும் சென்று தேர்தல் பிரசார வேலைகளைச் செய்கிறார். எல்லா நேரமும் அவரைப் பற்றியே பேசுகிறார். நீங்கள் வேறு யாரையும் நோக்க தேவையில்லை. மோடிஜியை பாருங்கள் அவருக்கு வாக்களியுங்கள். நாங்கள் எத்தனை முறைதான் உங்கள் முகத்தைப் பார்ப்பது? உங்களுக்கு எத்தனை வடிவங்கள்தான் இருக்கின்றன... ராவணன் போன்று உங்களுக்கு 100 தலைகள் இருக்கின்றனவா?" என்று விமர்சித்தார்.

அதேபோல் மற்றுமொரு காங்கிரஸ் தலைவரான மதுசூதன் மிஸ்திரி, ``சமீபத்தில் நரேந்திர மோடி அரங்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட அரங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும். இதன்மூலம் மோடிஜிக்கு அவருடைய நிலையைக் காட்டலாம்" என்று கூறியிருந்தார்.

 மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இந்த நிலையில், இன்று குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், தன்னை விமர்சனம் செய்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், மதுசூதன் மிஸ்திரிக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அவர் பேசுகையில், ``சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஒருவர் `மோடிக்கு நாய் போன்ற சாவு வரும்' என்கிறார். வேறொருவர் `மோடிக்கு ஹிட்லருக்கு நேர்ந்தது போன்ற சாவு வரும்' என்கிறார். மற்றொருவர் `எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நான் மோடியைக் கொன்றுவிடுவேன்' என்கிறார். ஒருவர் என்னை `ராவணன்' என்கிறார். மற்றொருவர் என்னை `அரக்கன்' என்கிறார். வேறொருவர் என்னை `கரப்பான்பூச்சி' என்கிறார்.

மோடி
மோடி

காங்கிரஸார் என்னை இப்படி அழைப்பது குறித்து நான் ஆச்சர்யப்படவில்லை. ஆனால் என்னை இப்படி அழைப்பது குறித்து யாரும் வருந்தமாட்டார்கள் என காங்கிரஸார் நினைப்பதைப் பற்றிதான் ஆச்சர்யப்படுகிறேன். நாட்டின் பிரதமரை இப்படி அவமானப்படுத்துவது தவறில்லை என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்.

குஜராத் மாநிலம் எனக்கு அளித்த பலம் காங்கிரஸை நடுங்க செய்கிறது. காங்கிரஸ் தலைவர் ஒருவர் இங்கு வந்து, `நாங்கள் மோடிக்கு அவர் நிலையைக் காட்டுவோம்' என்கிறார். இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதனால்தான் மல்லிகார்ஜூன கார்கேவை இங்கு அனுப்பியது. நான் கார்கேவை மதிக்கிறேன். ஆனால் அவர் நான் கேட்டதற்கு பதிலளிக்க வேண்டும். குஜராத் மாநிலம், ராமபக்தர்களின் இடம் என்பது காங்கிரஸுக்குத் தெரியவில்லை. இங்கு வந்து என்னை 100 தலைகள் கொண்ட ராவணன் என்கிறார். ராமரின் நிலத்தில் வந்து ஒருவரை ராவணன் என்பது சரியல்ல" என்றார்.