Published:Updated:

`யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..'- புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி ஐ.நாவில் பேசிய மோடி!

`` `யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது. எங்களுக்கென தனியாக கலை, கலாசாரம் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்"

modi
modi

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஹவுடி மோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். கடந்த சில நாள்களாக, அமெரிக்காவில் இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புகளை நடத்தி வந்த மோடி இன்று 74வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். தீவிரவாதம், காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசுவார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேச ஆரம்பித்தவர், ``உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா எனது தலைமையிலான அரசுக்கும் எனக்கும் வாக்களித்தது.

modi
modi

நாங்கள் ஒரு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். அவர்களின் ஆணை காரணமாக நான் இன்று இங்கே இருக்கிறேன். ``யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது. எங்களுக்கென தனியாக கலை, கலாசாரம் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்" எனப் பேசியுள்ளார்.

“நான் இங்கு வரும்போது ஐ.நா சுவர்களில் ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இனி வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்த வாசகத்தைப் படித்தேன். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக இந்தியாவில் மிகப்பெரிய பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறேன். இந்தியா 5 மாதங்களுக்குள் உலகின் மிகப்பெரிய தூய்மை திட்டத்தை நிறைவு செய்தது. நாட்டில் 11 கோடி கழிப்பறைகளை கட்டியது. காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருமாறி வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் 450 ஜிகா வாட்ஸ் இலக்கை அடைய நாங்கள் பணியாற்றி வருகிறோம். சூரிய மின் சக்திக்காக சர்வதேச கூட்டமைப்பை ஏற்படுத்தும் பணியில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவது அவசியது. தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. தீவிரவாதம் தனி ஒரு நாட்டிற்கான பிரச்னை இல்லை. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எதிரான பிரச்னையாக இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.

modi
modi

ஒரு வளரும் நாடு, உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 500 மில்லியன் மக்களுக்கு ஆண்டுதோறும் இலவச சிகிச்சைக்கான வசதியை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் சாதனைகள் உலகிற்குப் புதிய பாதையைக் காட்டுகின்றன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஆயூஷ்மான் பாரத் திட்டம் 50 கோடி மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது” எனப் பேசினார்.