Published:Updated:

`முதல்வர்கள் யோசனை: ஒட்டுமொத்த ஊரடங்குக்கு நோ?' - புதிய திட்டத்தை வகுக்கும் பிரதமர் அலுவலகம்

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

மாநிலங்கள் தங்களின் யோசனைகளை 15-ம் தேதி வரை அனுப்பலாம் என கூறிய நிலையில், இன்று பிரதமர் மோடி மக்கள் மத்தியில் என்ன பேசுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70,000-ஐ கடந்துவிட்டது. இந்த லாக்டெளன் வரும் 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

கடந்த முறை இதேபோன்று ஆலோசனை நடத்தும்போது நேரக்குறைவு காரணமாக அனைத்து முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த முறை அனைத்து முதல்வர்களும் தங்களின் பார்வையை பிரதமரிடம் எடுத்து வைத்தனர். பிரதமர் மோடியும் லாக்டெளன் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை எடுத்துரைத்தார்.

முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ``முதல்கட்ட ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் சில இரண்டாம்கட்ட ஊரடங்கில் தேவைப்படவில்லை. மேலும், இரண்டாம் கட்ட ஊரடங்கிலிருந்து மூன்றாம்கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று மூன்றாம்கட்ட ஊரடங்கில் இருக்கும் கட்டுப்பாடுகளில் சில அடுத்தடுத்த நாள்களில் தவிர்க்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் கூடுதல் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதையே விரும்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும் கூடுதல் தளர்வுகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, `நாட்டில் சிறப்பு ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளது. மே மாதம் 31-ம் தேதி வரையில் சென்னைக்கு ரயில் சேவை வேண்டாம்’ என்ற கோரிக்கையை வைத்தார். சென்னை மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதே அதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடியும் ரயில் போக்குவரத்து நிச்சயம் ஒரே கட்டமாக தொடங்கப்படாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான மாநிலங்கள், மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலமாக இருப்பதை விரும்பவில்லை. லாக் டெளனை விரும்பும் மாநிலங்கள் மாவட்டரீதியாக கட்டுப்பாடுகளை கொண்டு வராமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட பகுதியாக லாக்டெளன் கட்டுப்பாடுகளைப் பின்பற்றலாம் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது, தற்போது ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அந்த மாவட்டமே சிவப்பு மண்டலமாக இருக்கும். அதற்குப் பதிலாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியை மட்டும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கலாம் என்ற யோசனையை மாநிலங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து மீதம் இருக்கும் பகுதிகள் இயங்க வழிகிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், ``தற்போது நமக்கு பாதிப்பு இருக்கும் பகுதிகள் தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஊரடங்குகளில், மாவட்டரீதியாக அதிகாரிகள் தங்களின் செயல்பாடுகளை அறிந்திருக்கிறார்கள். அதனால் கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இன்னும் சிறப்பாக நம்மால் செயல்பட முடியும். நமக்கு முன்னால் இரு சவால்கள் இருக்கின்றன. ஒன்று கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில் மக்களின் செயல்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.

மே 17-ம் தேதிக்குப் பின்னரும் சிவப்பு மண்டலத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு, பொது போக்குவரத்து தடை முதலியவை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி, அடுத்தகட்ட ஊரடங்கில் என்ன என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என மாநில முதல்வர்களிடம், யோசனைகளை கேட்டதுடன், மே மாதம் 15-ம் தேதி வரையில் யோசனைகளை அனுப்பலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களிடம் யோசனைகளைக் கேட்டிருக்கிறார். டெல்லியில் மெட்ரோ இயங்கலாமா உள்ளிட்ட பல விஷயங்களுக்கு மக்கள் தங்களின் பதிலை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். மாநிலங்கள் தங்களின் யோசனைகளை 15-ம் தேதி வரை அனுப்பலாம் எனக் கூறிய நிலையில் இன்று மோடி மக்கள் மத்தியில் என்ன பேசுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் 15-ம் தேதிக்குப் பின்னர் பிரதமர் அலுவலகம் இறுதி முடிவெடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 17 -ம் தேதிக்குப் பின்னர் என்ன மாதிரியான ஊரடங்கு அமல்படுத்தப்படலாம்? உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே...!
அடுத்த கட்டுரைக்கு