காங்கிரஸ் முன்னாள் தலைவர் கபில் சிபல் சில தினங்களுக்கு முன்னால் `இன்சாஃப் கி சிபாஹி’ (நீதிக்கான மேடை) எனும் புதிய தளத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இவரின் இந்த முன்னெடுப்பு காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகியோரால் பாராட்டப்பட்டது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் கபில் சிபல், ``பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியிடம் நேற்று சி.பி.ஐ கேள்வி எழுப்பியதே அரசியல் அநீதிக்கு ஓர் எடுத்துக்காட்டு. சில குறிப்பிட்ட மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவை அவர்கள் அனுப்பும் விதமும், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். எட்டு அரசுகளை இந்த வழியில் வீழ்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் `இன்சாஃப் கி சிபாஹி’ (நீதிக்கான மேடை) எதிர்க்கட்சிகளால் பாராட்டப்பட்டது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்கூட, ஆம் ஆத்மி கட்சியையும், காங்கிரஸையும் ஒரே பக்கம் கொண்டுவர முடியவில்லை. அதில் கையெழுத்திட்ட எட்டு எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கையெழுத்திடவில்லை. ஆனால், என் புதிய தளத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
எனவே, எதிர்க்கட்சிகள் கூட்டணியாகக்கூட மாறலாம். இன்சாஃப்-ஐ (நீதியை) யாரால் எதிர்க்க முடியும்... நரேந்திர மோடியால்கூட இன்சாஃப்-ஐ எதிர்க்க முடியாது. எனவே, அவரும் எங்களுடன் சேர்ந்து, நடக்கும் அநீதிகளுக்குத் தீர்வு காண்பது வரவேற்கத்தக்கது" எனத் தெரிவித்திருக்கிறார்.