Published:Updated:

அதிமுக Vs பாமக... முற்றும் வார்த்தைப்போர் - என்னவாகும் கூட்டணி?!

ஜெயக்குமார் - அன்புமணி

``ஒரு தேர்தலில் கூட்டணி வைத்தால் அதைத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. தொண்டர்களை உற்சாகமடைய வைக்க அன்புமணி பேசினார். அதை ஜெயக்குமார் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றி வருகிறார்.” - பாமக-வினர்

அதிமுக Vs பாமக... முற்றும் வார்த்தைப்போர் - என்னவாகும் கூட்டணி?!

``ஒரு தேர்தலில் கூட்டணி வைத்தால் அதைத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. தொண்டர்களை உற்சாகமடைய வைக்க அன்புமணி பேசினார். அதை ஜெயக்குமார் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றி வருகிறார்.” - பாமக-வினர்

Published:Updated:
ஜெயக்குமார் - அன்புமணி

பா.ம.க இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி கடந்த மே மாதம் பா.ம.க தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஆனது முதலே 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த எதிர்காலத் திட்டமிடலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தச்சூழலில், கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "2026-ல் பா.ம.க தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ப 2024 தேர்தலில் வியூகம் அமைப்போம்'' என அறிவித்தார். ஏற்கனவே, அ.தி.மு.க சிதறிக்கிடக்கும் நிலையில், `எங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம்' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். இத்தகைய சூழலில், அன்புமணியின் கூட்டணி தலைமை குறித்த பேச்சு அ.தி.மு.க-பா.ம.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அன்புமணி
அன்புமணி

பின்னர், மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு வரும் அன்புமணி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில், பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ''2022-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் கடந்த மாதம் 30-ம் தேதி புதுச்சேரி அருகே திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, "அதிமுக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது நாம்தான். தமிழ்நாட்டில் பாமக-விற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது. மற்ற கட்சிகளை பார்த்தால், கலைந்து, பிரிந்து, உடைந்து, தேய்ந்து போய் இருக்கும் சூழல் நிலவி வருகிறது. நாம் வளர்ச்சியை நோக்கி செல்கிறோம். நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்" எனப் பேசினார்.

அன்புமணி - பாமக
அன்புமணி - பாமக

அன்புமணி யின் இத்தகைய பேச்சு மீண்டும் கூட்டணிக்குள் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. அன்புமணியின் இத்தகைய கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, "ஒரு பக்கம் வருத்தமும் வேதனையுமாக உள்ளது. மறுபக்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அ.தி.மு.க தான். அ.தி.மு.க ஏற்றி விடவில்லை என்றால் பா.ம.க என்ற கட்சியே கிடையாது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இதை அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் 5 சீட்டுக் கொடுத்ததால் தான், 4 இடத்தில் வெற்றி பெற்றனர். அந்த 4 இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. அன்புமணி ராமதாஸ் அப்படி பேசினால் உங்கள் பக்கம் உள்ளவர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள். அ.தி.மு.க-வால் மட்டுமே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பலம் வாய்ந்த அ.தி.மு.கவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்துப் பேசினால் அதிமுக சிறுமை வாய்ந்ததாக மாறி விடுமா?

அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி என்ற பதவியை அடையாளம் காட்டியதே அ.தி.மு.க தான். அவரின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுமைப்படுத்துகின்ற வேலையை அன்புமணி ராமதாஸ் செய்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

பாலு
பாலு

ஜெயக்குமாரின் பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய வழக்கறிஞரும், பா.ம.க செய்தி தொடர்பாளர் பாலு, ``அதிமுக பிளவுபட்டுள்ளதாக அன்புமணி கூறியது சாதாரண குழந்தைக்குக் கூட தெரியும். அன்புமணி எம்.பி ஆனதில் ஜெயக்குமார் பங்கு என்ன? கூட்டணி ஒப்பந்தத்தின் படியே அன்புமணிக்கு அ.தி.மு.க சார்பில் எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

1996-ஐ ஜெயக்குமார் சற்று திரும்பி பார்க்க வேண்டும். 1998-ல் ஜெயலலிதா, பா.ம.க அலுவலகத்தைத் தேடி வந்து ராமதாஸுடன் பேசி கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற்றார். பா.ம.க தயவில்தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என்று நாங்கள் ஒருபோதும் கூறியது இல்லை. ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும் போது கவனத்துடன் பேச வேண்டும். அன்புமணி ராமதாஸ் தனது விமர்சனம் குறித்து விளக்கிய பிறகும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது தவறானது. ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பா.ம.க தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. எதைச் சொல்ல வேண்டும் என்பதை விட எதைச் சொல்லக்கூடாது என்பதில் ஜெயக்குமார் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்தகால அதிமுக வரலாற்றை ஜெயக்குமார் சற்று திரும்பி பார்க்க வேண்டும். ஜெயக்குமார் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக வீழ்ந்து கிடந்த போது அதற்கு உயிர் கொடுத்தது பாமக தான். நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் வேலையை ஜெயக்குமார் செய்கிறார்" என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இவ்வாறு அ.தி.மு.க-பா.ம.க இடையே மோதல் முற்றியுள்ளதுமிந்த மோதலால் 2024ல் அ.தி.மு.க உடன் பாமக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதுகுறித்து பாமக மூத்த நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், "ஒரு தேர்தலில் கூட்டணி வைத்தால் அதைத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. புத்தாண்டுக்கு முந்தைய நாள் தொண்டர்களை உற்சாகமடைய வைக்கும் வகையிலும், கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் அன்புமணி பேசினார். அதை ஜெயக்குமார் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றி வருகிறார். அ.தி.மு.க சரிவைச் சந்தித்த நேரங்களில் பா.ம.க துணை நின்றிருக்கிறது. அதை மறந்துவிட்டு ஜெயக்குமார் பேசுகிறார். அதனாலேயே ஜெயக்குமார் பேச்சுக்கு எடப்பாடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். 2024-ல் தேசிய கட்சிகளுடன் தான் கூட்டணி வைப்போம். அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து இப்போது ஏதும் முடிவு செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் முறையான அறிவிப்பு இருக்கும்" என்றனர்.