
கொதிக்கும் வழக்கறிஞர் பாலு
‘ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதியில்லை’ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது தமிழக அரசு. அந்த மனு மீதான விசாரணை இன்னும் தொடங்கப்பட வில்லை.
இந்த நிலையில், மதுவுக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றப் படிகளில் ஏறிக்கொண்டிருப்பவரும், இந்த வழக்கில் தங்களை கேட்காமல் விசாரணை நடத்தவோ உத்தரவிடவோ கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளவர்களில் ஒருவருமான, பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
‘‘உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘மதுக்கடைகளைத் திறந்தால், மக்களின் கவனம் சிதறடிக்கப்படும்; கொரோனா நோய்ப்பரவல் அதிகமாகும்; குடும்ப வன்முறைகள் பெருகும்; சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உருவாகும் என எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்தோம். ஆனால் தமிழக அரசு, மது வாங்குவதற்காக அண்டை மாநிலங்களுக்கு மக்கள் செல்கிறார்கள் எனும் இல்லாத காரணத்தைச் சொல்லி, மதுக்கடைகளைத் திறந்தார்கள். இப்போது தடையை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். மதுக்கடைகளைத் திறக்க ஆவலாக இருக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் மிக மோசமானவை.’’
‘‘மதுக்கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தால், அடுத்து உங்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?’’
‘‘மதுக்கடைகளைத் திறக்கும் முடிவிலிருந்து தமிழக அரசு பின்வாங்க வேண்டும். கடைகளை மீண்டும் திறந்தால், அது காவல்துறைக்கு பெரும் நெருக்கடியாக அமையும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, நிபந்தனைகளை மீறினால் கடை நடத்த அனுமதி கிடையாது என்றுதான் நீதிபதிகள் முதலில் அனுமதி வழங்கினர். ஆனால், நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கண்டிப்பாக இந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிடாது என்றே நான் நம்புகிறேன்.’’
‘‘ஆனால், ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதே?’’
‘‘இந்தக் காலகட்டத்தில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால், எங்களின் இலக்கு பூரண மதுவிலக்குதான்.’’

‘‘மறுவாழ்வு மையங்கள் உட்பட மாற்று நடவடிக்கைகள் எதைவும் செய்யாமல் மதுக்கடைகளை மூடினால், குடி நோயாளிகள் உடல்ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்களே!’’
‘‘மதுக்கடைகளை மூடி நாற்பது நாள்களுக்கும் மேலாகிவிட்டது. இத்தனை நாள்களில் குடிப்பவர்கள் யாருக்கும் மது பற்றிய சிந்தனை துளியளவும் இல்லை. அத்தியாவசியத் தேவைகளையும் தங்களின் தொழில்களை மீண்டும் தொடங்கு வதற்கான அனுமதியையும்தான் அரசிடம் மக்கள் கேட்டார்கள். மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என யாரும் போராடவில்லை. மதுக்கடைகளை மூடினால் இரு பெரும் ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக அரசு சொன்னது. ஒன்று, மது குடிக்காமல்விட்டால் மருத்துவரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்றார்கள். மது குடிக்காமல் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஒரு மருத்துவ அறிக்கையும் கிடையாது. இரண்டாவதாக, கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றார்கள். ஒருசில இடங்களில் தான் நடந்தனவே தவிர, பெரும்பான்மையானோர் மதுவை மறந்தே இருந்தார்கள். எனவே, அரசு சொன்ன இரண்டு காரணங்களும் பொய் என நிரூபணமாகிவிட்டது. பணம் ஈட்டுவது மட்டுமே அரசின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.”
‘‘ ‘மது ஆலைகளை நடத்தும் தி.மு.க-வினர், மதுக்கடைகளைப் பற்றிப் பேசக் கூடாது’ என அமைச்சர் செல்லூர் ராஜு உட்பட பலர் விமர்சனம் செய்கிறார்களே?’’
‘‘சரியான விஷயம்தான். எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும். ஆனால், அதையே காரணமாகச் சொல்லி மதுக்கடைகளை நடத்துவோம் என தமிழக அரசு சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டுமே தவறுதான்.’’
‘‘மதுக்கடைகள் அரசு நடத்துபவை... மது ஆலைகள் தனியார் நடத்துபவை... மது ஆலைகள் நடத்த அரசே அனுமதி வழங்கியிருக்கும்போது, தனிநபர்களை விமர்சிப்பது சரியா?’’
‘‘ஆலை நடத்தும் உரிமை தனிநபர்களுடையது. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், தன் கட்சியில் யார் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் முடிவுசெய்யலாம் அல்லவா! மதுக்டைகளைத் திறக்கக் கூடாது என கறுப்புக்கொடி காட்டிப் போராடுகிறார் ஸ்டாலின். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தன் கட்சியில் மது ஆலைகளை நடத்துபவர்களை முக்கிய நிர்வாகிகளாக வைத்துக்கொண்டு அவர் போராடினால், அது எப்படி சரியாக இருக்கும்?’’
‘‘மதுவுக்கு எதிராக இத்தனை அழுத்தமாகக் குரல்கொடுக்கும் பா.ம.க, ‘மதுக்கடைகளை மூடாவிட்டால் எதிர்காலத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை’ என்று அறிவிக்குமா?’’
‘‘கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் என்னிடத்தில் இல்லை. அதை கட்சி தலைமைதான் முடிவுசெய்யும்!’’