Published:Updated:

ரூட்டை மாற்றுகிறாரா ராமதாஸ்?

ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ்

தமிழ்நாட்டுல ஒவ்வொரு தேர்தல் முடிஞ்ச பின்னாடியும் யார் மூன்றாவது பெரிய கட்சின்னு ஒரு விவாதம் நடக்கும்.

ரூட்டை மாற்றுகிறாரா ராமதாஸ்?

தமிழ்நாட்டுல ஒவ்வொரு தேர்தல் முடிஞ்ச பின்னாடியும் யார் மூன்றாவது பெரிய கட்சின்னு ஒரு விவாதம் நடக்கும்.

Published:Updated:
ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ்

“என் நண்பர் கலைஞர்போல் செயல்படுகிறார் ஸ்டாலின். சமூகநீதியில் முதல்வர் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள்...”, “பட்ஜெட்டில் கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தகவை...” எனச் சமீபகாலமாக ஆளும் தரப்பின்மீது பாராட்டு மழை பொழிந்துவருகிறார் ராமதாஸ். ‘யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான்’ என அறிக்கைப்போர் புரியும் பா.ம.க., தற்போது எதிர்க்கட்சிகளுள் ஒன்றாக இருந்தபோதும், தோழமைக் கட்சியைப்போல ஆளுங்கட்சியை அணுகிவருவதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது!

2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பயணித்துவந்த பா.ம.க., கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் கண்டு, கணிசமான இடங்களைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., மாநகராட்சியில் ஐந்து, நகராட்சியில் 48, பேரூராட்சிகளில் 73 என ஒட்டுமொத்தமாக, 126 இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்தது. இது கணிசமான வெற்றிதான் என்றாலும், பா.ம.க தலைமை எதிர்பார்த்த வெற்றி இல்லாததால், தனது அரசியல் ரூட்டை மாற்ற பா.ம.க தலைமை முடிவுசெய்திருப்பதாகத் தோட்டத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.

திலகபாமா
திலகபாமா

“ஆளுங்கட்சியைச் சமீபகாலமாக ஐயா பாராட்டிவருவதுகூட அதற்கான அறிகுறிதான்” என்று சொல்லும் பா.ம.க முக்கிய நிர்வாகிகள் சிலர், ராமதாஸின் இந்த ரூட் சேஞ்சுக்கான காரணத்தையும் விரிவாக விளக்கினார்கள், “தமிழ்நாட்டுல ஒவ்வொரு தேர்தல் முடிஞ்ச பின்னாடியும் யார் மூன்றாவது பெரிய கட்சின்னு ஒரு விவாதம் நடக்கும். நாங்கதான் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்போம் அல்லது அதற்கான விவாதங்கள்லயாவது இருப்போம். கடந்த வருடம் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகுகூட, நாங்கதான் மூன்றாவது பெரிய கட்சின்னு நாங்க சொல்ல... இல்லை நாங்கதான் பெரிய கட்சின்னு காங்கிரஸ் தலைவர் அழகிரி சொல்ல... மிகப்பெரிய அளவுல விவாதமானது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னாடி ஒப்புக்குக்கூட எங்களால அப்படிச் சொல்லிக்க முடியலை. பா.ஜ.க-வும் காங்கிரஸும்தான் அந்தப் போட்டியில இருந்தாங்க. ‘கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை வெற்றி’னு வெளியில ஐயா அறிக்கை வெளியிட்டாலும் கட்சி எதிர்காலம் குறித்த பயத்தை அந்தத் தேர்தல் ஐயாவுக்கு உருவாக்கிடுச்சு. அதுமட்டுமில்லை, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் எல்லாக் கட்சிகளும் மேயர், துணை மேயர் தொடங்கி நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகள்ல இருக்காங்க. ஆனா, பா.ம.க-வுக்கு அப்படியான வாய்ப்புகள் இல்லாமப் போயிடுச்சு. இதே நிலைமை நீடிச்சு, நாடாளுமன்றத் தேர்தல்லயும் கோட்டைவிட்டுட்டா, கட்சி என்னாகும்னு ஐயாவுக்குக் கவலை உண்டாகிடுச்சு. அதனாலதான், ஒருசில விமர்சனங்களை வெச்சாலும் அவ்வப்போது ஆளுங்கட்சியைப் பாராட்டியும் அறிக்கை வெளியிடுறாரு. அன்புமணிகிட்ட கட்சித் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும்போது, கட்சி வலுவாக இருக்கணும்னு ஐயா நினைக்கிறாரு.

பணத்தை வாரி இறைக்கிறதா இருக்கட்டும், மற்ற விஷயங்களாகட்டும் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளோடவும் களத்துல போட்டிபோட எங்களால முடியலை. பல நிர்வாகிகள் கட்சியிலருந்து விலகி தி.மு.க., அ.தி.மு.க-வுக்குப் போயிட்டு இருக்காங்க. பற்றாக்குறைக்கு, பா.ஜ.க-காரங்களும் எங்க கட்சியிலருந்துதான் ஆட்களை இழுக்கப் பார்க்கிறாங்க. இது, ஐயாவுக்குக் கடுமையான மன உளைச்சலை உண்டாக்கிடுச்சு. சட்டமன்றத் தேர்தல்லயே தி.மு.க-வோட கூட்டணிவெச்சுருந்தா இன்னும் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் கிடைச்சிருப்பாங்க. உள்ளாட்சித் தலைமைப் பொறுப்புகள்லயும் இருந்திருப்பாங்க. ஆனா, எல்லாத்தையும் கோட்டைவிட்டுட்டோம். இனிமேலும் அப்படி நடக்கக் கூடாதுன்னு ஐயா தெளிவா இருக்காரு. அதற்கான சமிக்ஞைகள்தான் ஐயாவின் சமீபத்திய பாராட்டுகள்’’ என்கிறார்கள்.

ரூட்டை மாற்றுகிறாரா ராமதாஸ்?

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசும்போது, ``2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை பா.ம.க-வுக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளடக்கிய தி.மு.க கூட்டணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்துவருகிறது. பா.ம.க-வை கூட்டணியில் சேர்க்காமல் இப்படியொரு வெற்றியை தி.மு.க அணி பெறுவது தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம். அதனால்தான், ஆளும் தி.மு.க-வைக் கையாள்வதில் மிக கவனமாகச் செயல்படுகிறார் மருத்துவர் ராமதாஸ். பட்ஜெட்டில் ஒருசில விஷயங்களை ஆதரிப்பதும், ஒருசில விஷயங்களைச் சுட்டிக்காட்டுவதுமாக பேலன்ஸ் செய்கிறார். தவிர, அவருடைய எம்.எல்.ஏ-க்களுக்கான தொகுதி வேலைகள் சரியாக நடக்க வேண்டும் என்பதும் இதில் அடக்கம். அதேவேளை, மத்திய பா.ஜ.க அரசையும் எதிர்க்காமல், அந்தக் கதவையும் திறந்தேதான் வைத்திருக்கிறார். முழுமையாக அடைக்கவில்லை’’ என்றார்.

பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம். ``எப்போதும் விமர்சனங்கள் செய்துகொண்டே இருப்பதில் என்ன இருக்கிறது... ஆட்சி அமைந்து ஒரு வருடம்கூட இன்னும் முழுமையடையவில்லை. அதில் பாதி நாள்கள் கொரோனா காலமாகிவிட்டன. ஏகப்பட்ட கடன்சுமை வேறு அரசுக்கு இருக்கிறது. அதனால் தான் உடனடியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க மனம் வரவில்லை. எப்படிக் கையாள் கிறார்கள் என்பதைப் பொறுமையாகத்தான் கவனிக்க வேண்டும். ஆனால், இப்போதும்கூட ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். தவிர, பாராட்டி தேவைப்படும் காரியங்களைச் செய்யவைப்பது நல்லதுதானே... மக்கள் நலன்தானே நமக்கு முக்கியம். இதனால், எங்களுடைய அரசியல் ஸ்ட்ராட்டஜி மாறிவிட்டதா என்று கேட்டால், ஆமாம் என்றுதான் நான் சொல்வேன்’’ என்கிறார் தடாலடியாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism