அலசல்
Published:Updated:

சூர்யாவின் பதில் ஆணவத்துடன் இருக்கிறது! - வெடிக்கும் பா.ம.க பாலு...

பாலு
பிரீமியம் ஸ்டோரி
News
பாலு

நான் இப்படித்தான் செய்வேன் என்று ஒருவர் தொடர்ந்து ஒரு தவற்றைச் செய்யும்போது, அவர் அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ளும் வகையில் எதிர்வினை ஆற்றுவது இயற்கை

நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி கடிதம், அதற்கு சூர்யாவின் பதில் கடிதம்... என தொடர் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது ‘ஜெய்பீம்’ திரைப்படம். இந்தநிலையில், மேற்கண்ட விவகாரத்தில், பா.ம.க மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் எழுப்பப்படும் கேள்விகளை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலுவிடம் முன்வைத்தோம்...

‘‘ ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் அக்னிக்கலச காலண்டர் நீக்கப்பட்ட பிறகும், பா.ம.க அதை விவாதமாக்குவது ஏன்?’’

‘‘உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை என்கிறார்கள். சந்துரு, பெருமாள்சாமி, ராஜாக்கண்ணு ஆகியவர்களின் பெயர்கள், சம்பவம் நடந்த ஊரின் பெயர் அப்படியே இருக்கின்றன. ஆனால், எதிர்மறைக் கதாபாத்திரத்தின் பெயர் மாற்றப் பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் உண்மையிலேயே உழைத்த கோவிந்தன் என்கிற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரின் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி, அக்னிக்கலசத்தையும், குருமூர்த்தி என்ற பெயரையும் பார்க்கும்போது, இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விஷயமாகவே நாங்கள் பார்க்கிறோம். காலண்டர் தற்செயலாக வைக்கப்பட்டதில்லை என்பதற்கு, அதில் இருந்த வருடமே சாட்சி. ஒரு சமூகத்தையே தீய எண்ணம் கொண்டவர்களாகச் சித்திரிக்க முயன்றிருக்கிறார்கள். அமேசான் நிறுவனம் இந்த விஷயம் குறித்து பொறுப்பாகப் பதில் தருகிறது. ஆனால், சூர்யாவின் பதில் ஆணவத்தோடு இருக்கிறது. அதனால், இதை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், நடிகர் சூர்யா, அமேசான் நிறுவனத்தினர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். தொடர்புடைய விஷயங்கள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.’’

‘‘சூர்யா ஆணவத்தோடு என்ன பதில் தந்தார்?’’

‘‘ `அந்தத் தவறைச் செய்திருக்கக் கூடாது’ என்றோ, `அதற்காக வருந்துகிறேன்’ என்றோ, `காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றோ அறிக்கை வெளியிடாமல், ‘பிழை உடனடியாகத் திருத்திச் சரிசெய்யப்பட்டது’ என்கிறார். தெரியாமல் நடப்பதுதான் பிழை. இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்று.’’

‘‘மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிரட்டும் தொனியில் வெளியிட்ட அறிக்கையின் எதிர்வினையாகத்தானே சூர்யாவின் அறிக்கை வெளியானது?’’

‘‘அவர் எந்தவிதத்தில் கேள்வி எழுப்பினார் என்பது முக்கியமில்லை. அந்தக் கேள்விகளின் ஆழம் என்ன என்பதுதான் முக்கியம். எதிர் காலத்தில் மீண்டும் இதுபோல நடக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டினார். அதில் தவறேதும் இல்லை.”

‘‘உங்களுடைய எதிர்ப்புகளைக் கருத்துகளாக வெளிப்படுத்துவது சரி... ஆனால், ‘படம் வெளிவராது, தியேட்டரைக் கொளுத்துவோம்’ என்றெல்லாம் பேசுவது சரியா?’’

‘‘நான் இப்படித்தான் செய்வேன் என்று ஒருவர் தொடர்ந்து ஒரு தவற்றைச் செய்யும்போது, அவர் அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ளும் வகையில் எதிர்வினை ஆற்றுவது இயற்கை. அக்னிக்கலசம் இருந்த இடத்தில் அண்ணல் அம்பேத்கரின் படத்தையோ, முத்துராமலிங்கத் தேவரின் படத்தையோ, வீரன் அழகுமுத்துக்கோனின் படத்தையோ வைத்திருக்க முடியுமா? இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகாமல், தியேட்டரில் வந்திருந்தால் அப்போது தமிழகத்திலுள்ள வன்னியர் சமூகத்தின் கொந்தளிப்பை அவர் உணர்ந்திருப்பார்.’’

‘‘இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கும் அன்புமணி மற்றும் உங்களைப் போன்றவர்களே இப்படிப் பேசுவது சரியா?’’

‘‘எங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான பணியை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஐயா ராமதாஸ் செய்துவருகிறார். மெல்ல மெல்ல நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யாரோ ஒருவர் சீண்டுவதால், மீண்டும் பழையநிலைக்கு எங்கள் சமூக இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது. அப்படியொரு நிகழ்வு எதிர்காலத்தில் நடந்தால், அது பெரும் ஆபத்தாக முடியும் என்று சூர்யாவுக்குச் சுட்டிக்காட்டுவதாகத் தான், நீங்கள் இதைப் பார்க்க வேண்டும்.’’

``முன்பு வெளியான ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களில் மற்ற தலைவர்களைப் பற்றி தரக்குறைவாகச் சித்திரிக்கப்பட்டது. அந்தப் படத்தை பா.ம.க-வினர் கொண்டாடினார்களே?’’

‘‘அந்தப் படங்களுடன் இந்தப் படத்தைத் தொடர்புபடுத்தக் கூடாது. அந்தப் படங்கள் எந்தவிதத்திலும் அம்பேத்கரையோ, அந்தச் சமூகத்தினரையோ சிறுமைப்படுத்தும்விதத்தில் இல்லை.’’

``நாடாளுமன்ற உறுப்பினராக கவனப்படுத்தவேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது, ஒரு திரைப்படத்துக்காக அன்புமணி கடிதம் எழுதுகிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?’’

‘‘இந்த விமர்சனங்கள் தவறானவை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர் சார்ந்த ஒவ்வொரு பிரச்னை குறித்துப் பேசும் உரிமை, கடமை இருக்கிறது.’’

சூர்யாவின் பதில் ஆணவத்துடன் இருக்கிறது! - வெடிக்கும் பா.ம.க பாலு...

‘‘மது ஒழிப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் சட்டத்தை நாடும் பா.ம.க., இந்த விஷயத்தையும் சட்டரீதியாக அணுகியிருக்கலாமே?’’

‘‘நிச்சயமாக. தார்மிகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுக்கொள்ளாமல், அந்தக் காட்சிகளை நீக்காமல், அதிகாரத்தோடு வலம்வரும் இவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளிலும் நாங்கள் இறங்குவோம்.’’

‘‘அஜெண்டா இல்லாத ஆட்கள், படத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியாத ஐயாக்கள்தான் இது போன்ற பிரச்னைகளைக் கிளப்புகிறார்கள் என முன்னாள் நீதியரசர் சந்துரு விமர்சித்திருக்கிறாரே?’’

‘‘நீதிபதி சந்துரு அவர்களுக்கு இது போன்ற கருத்துகள் அழகல்ல. ‘கோவிந்தன் யார் என்று தெரியாது’ என்று சொல்லி மற்றவர்களின் உழைப்பை எப்போது தனது சாதனையாக நீதிபதி சந்துரு பார்த்தாரோ, அப்போதே அவர் `நீதிபாதி’யாக மாறிவிட்டார்.’’

‘‘எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு தொலைபேசியில் பா.ம.க-வினர் தொடர்ந்து அச்சுறுத்தல் தருவதாக த.மு.எ.க.ச கண்டனம் தெரிவித்திருக்கிறதே?’’

‘‘அப்படித் தொந்தரவு செய்வது தவறு. யார் அப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதேவேளையில் முற்போக்கு கலை, எழுத்து குறித்துப் பேசுபவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை குறித்துப் பேசி அதைக் கண்டித்துவிட்டு, பா.ம.க செய்வதையும் தவறு என்று சொன்னால் சரி.’’