Published:Updated:

பஞ்சமி நிலம் குறித்து ஆவணங்களை வெளியிட ஸ்டாலின் தயங்குவது ஏன்? - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கேள்வி

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

பஞ்சமி நிலம் குறித்து ஆவணங்களை வெளியிட ஸ்டாலின் தயங்குவது ஏன் என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாநகர அ.தி.மு.க மாவட்டக் கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பன்னீர்செல்வத்தின் இல்லத் திருமணம் சேலம் மூன்று ரோட்டில் உள்ள வரலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பா.ம.க தலைவர் ஜி.கே. மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

இத்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.கே.மணி பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, ``விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.கவின் கவசமாக இருந்த இரு தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது இமாலய சாதனை ஆகும். நாங்கள் நடத்தக் கூடிய கல்வி அறக்கட்டளையில் எந்த தவறும் நடக்கவில்லை. ஒரு சின்ன தவறு செய்திருந்தாலும் எங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். எனச் சட்டமன்றத்திலேயே நான் பேசி இருந்தேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.மணி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.மணி
எம். விஜயகுமார்

ஆனால், தேவையில்லாமல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவதூறாகப் பேசி வருகிறார். தி.மு.க தான் பஞ்சமி நிலம் குறித்து பிரச்னை எழுப்பியது. எனவே, பஞ்சமி நிலம் குறித்த உண்மை நிலவரத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அதற்கான ஆவணங்களையும் உடனே வெளியிட வேண்டும். தவறு இல்லையென்றால் உடனே ஆவணங்களை வெளியிட வேண்டியது தானே. தயங்குவது ஏன்? பதில் சொல்ல வேண்டிய தி.மு.க தலைவர் பதில் சொல்ல வேண்டும்.

நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் சொல்லி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி கிடைக்கவில்லை. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை. நிதி ஒதுக்கினால் தான் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி அடையும்.

மக்களின் அடிப்படை பிரச்னைகள் அப்போதுதான் தீர்க்கப்படும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமெனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அ.தி.மு.க அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடமும், உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும் பேசினோம். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு